பொதுக்காலம் - 31 ஆம் வாரம்

வியாழன் அக்டோபர் , 08.11.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 3-8

சகோதரர் சகோதரிகளே, உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரை விட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும். நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன். ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 105: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 3b)

பல்லவி: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக!

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 11: 28 - அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், ``இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது' என்றார்'' (லூக்கா 14:26)

பழைய மொழிபெயர்ப்பில் ''...தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால்'' என்பது ''...தன் உயிரையுமே வெறுக்காவிட்டால்'' என்றிருந்தது. கிரேக்க மூலத்தில் ''வெறுக்காவிட்டால்'' என்றுதான் உள்ளது. ஆகவே, இயேசுவைப் பின்செல்வோர் தம் குடும்பத்தையும் தம்மையும் ''வெறுக்க வேண்டுமா'' என்னும் கேள்வி எழுகிறது. ''வெறுப்பு'' என்னும் சொல் ஓர் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. நமக்கு விருப்பமில்லாததை நாம் ''வெறுக்கிறோம்'' எனலாம். குடும்பத்தை வெறுக்க வேண்டும் என்றால் இவ்வாறு ''உணர்ச்சி''யளவில் நாம் குடும்பத்தைப் ''பகைக்க வேண்டும்'' என்று பொருள் ஆகாது. அதுபோல நாம் நம்மையே ''வெறுக்கவேண்டும்'' என்றால் நம்மைப் பற்றித் தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்று பொருளாகாது. ''வெறுப்பு'' என்னும் சொல் நம்மைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை இங்கே குறிக்கிறது. அதாவது, நாம் குடும்பத்தையும் நம் உயிரையும் விட இயேசு கிறிஸ்துவைப் பின்செல்வதை ''மேலானதாக''க் கருத வேண்டும். இவ்வாறு நாம் கருதுவதைப் பார்க்கின்ற பிற மக்கள் நாம் குடும்பத்தையும் நம் உயிரையும் ''வெறுக்கிறோம்'' என்னும் முடிவுக்குத் தான் வருவார்கள். ஆனால் இயேசு இத்தகைய முடிவுபற்றிக் கவலைப்படவில்லை. அவரே தம் குடும்பத்தை விட்டுவிட்டுத் தம் வாழ்க்கையை இறையாட்சிப் பணிக்காக அர்ப்பணித்தார். தம் ''தந்தையின் அலுவல்களில்'' அவர் ஈடுபட்டிருந்தார் (காண்க: லூக் 2:49). தம் உயிரை நமக்காகச் சிலுவையில் கையளித்தார். தந்தையின் திருவுளத்திற்கு அமைந்து வாழ்வதே இயேசுவின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்தது, -- இயேசுவைப் பின்சென்ற சீடர்கள் தங்கள் பெற்றோரையும், மனைவி பிள்ளைகளையும், சகோதர சகோதரிகளையும் விட்டுவிட்டு அவரைப் பின்சென்றார்கள் என்றால் அவ்வாறு கைவிடப்பட்ட குடும்பத்தின் நிலை என்னவாயிற்று என்னும் கேள்வி எழலாம். அக்குடும்பத்தினர் துன்புற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. மகன் பெற்றோருக்கு உதவ வேண்டும் என்பதும் கணவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான பொருள் ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்பதும் அக்கால வழக்கம். குறிப்பாக, பெண்கள் பொருளாதார நிலையில் தனித்துச் செயல்பட முடியாத சூழமைவே அன்று இருந்தது. ஆக, சீடர்கள் தம் குடும்பத்தை விட்டு இயேசுவைப் பின்சென்ற போது அக்குடும்பத்தினர் பல துன்பங்களைச் சந்தித்திருப்பார்கள் என நாம் உறுதியாகக் கூறலாம். என்றாலும் இத்தகைய துன்பம் இரண்டு மூன்று ஆண்டுகளே நீடித்திருக்க வேண்டும். ஏனென்றால் இயேசுவின் சிலுவைச் சாவுக்குப் பிறகு, அவர் உயிர்பெற்றெழுந்ததும் சீடர்கள் தங்கள் குடும்பத்தினரோடு மீண்டும் உறவு ஏற்படுத்தியிருப்பார்கள் எனத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, பவுல் ''மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?'' என்று கேட்கிறார் (காண்க: 1 கொரி 9:5). இதிலிருந்து கேபா (பேதுரு) மற்றும் சீடர்கள் தங்கள் குடும்பத்தினரோடு உறவாடத் தொடங்கினர் என்பது தெரியவருகிறது. எவ்வாறாயினும், இயேசுவைப் பின்செல்வோர் தம் சொந்தக் குடும்பம், சொத்து, ஏன் தம் உயிர் என பற்றுக்கொண்டு வாழாமல் அனைத்தையும் கிறிஸ்துவின் பொருட்டுத் துறந்துவிடவும் தயாராக இருக்க வேண்டும் என்னும் இயேசுவின் போதனை இக்காலத்தில் வாழ்கின்ற நமக்கும் பொருந்தும்.

மன்றாட்டு:
இறைவா, பற்றற்ற உள்ளத்தோடு உம்மைப் பற்றிக் கொள்ள எங்களுக்கு அருள்தாரும்.