பொதுக்காலம் - 33 ஆம் வாரம்

செவ்வாய் நவம்பர் , 20.11.2012


முதல் வாசகம்



திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 3: 1-6, 14-22

யோவான் என்னும் எனக்கு ஆண்டவர் கூறியது: சர்தையில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: `கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களை நான் அறிவேன். நீ பெயர் அளவில்தான் உயிரோடு இருக்கிறாய்; உண்மையில் இறந்துவிட்டாய். எனவே விழிப்பாயிரு. உன்னில் எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து. அது இறக்கும் தறுவாயில் உள்ளது. என் கடவுள் திருமுன் உன் செயல்கள் நிறைவற்றவையாய் இருக்கக் கண்டேன். நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்; அவற்றைக் கடைப்பிடி; மனம் மாறு; நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப் போல வருவேன். நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய். ஆயினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர் சர்தையில் உள்ளனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து என்னுடன் நடந்து வருவார்கள். அவர்கள் அதற்குத் தகுதி பெற்றவர்களே. வெற்றி பெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன். கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.' இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: `ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே: உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும். இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன். ``எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை'' என நீ சொல்லிக்கொள்ளுகிறாய். ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை. ஆகவே, நீ செல்வம் பெறும் பொருட்டு புடம்போட்ட பொன்னையும், ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி அணிந்துகொள்ள வெண்ணாடையையும், நீ பார்வை பெறும் பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தையும் என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளுமாறு உனக்கு அறிவுரை வழங்குகிறேன். நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே நீ ஆர்வம் கொண்டு மனம் மாறு. இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள். நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன். கேட்கச் செவி உடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.'

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 15: 2-3. 4. 5 (பல்லவி: திவெ 3: 21)

பல்லவி: வெற்றி பெறுவோருக்கு அரியணையில் வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.

2 மாசற்றவராய் நடப்போரே! இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். பல்லவி

4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


1 யோவா 4: 10b - அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10

அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ``சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்'' என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், ``பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்'' என்று முணுமுணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, ``ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, ``இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்'' என்று சொன்னார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு சக்கேயுவை நோக்கி, 'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்துபோனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்' என்று சொன்னார்'' (லூக்கா 19:9-10)

வரிதண்டுவோருக்குத் தலைவராக இருந்த சக்கேயு என்பவர் இயேசுவைச் சந்தித்த நிகழ்ச்சியை லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே பதிவுசெய்துள்ளார் (காண்க: லூக் 19:1-10). அந்த நிகழ்ச்சியோடு லூக்கா ''ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி'' என்னும் பகுதியை நிறைவுக்குக் கொணர்கின்றார் (காண்க: லூக் 15:1-19:10). இருப்பினும், ஏழைகள் பற்றியும் தாழ்த்தப்பட்டோர் பற்றியும் அமைந்துள்ள இப்பகுதியின் இறுதியில் செல்வம் படைத்த ஒருவரின் வரலாற்றையும் லூக்கா இணைத்திருப்பது கருதத்தக்கது. இயேசு வழியாகக் கடவுள் வழங்குகின்ற மீட்பு எல்லா மனிதருக்கும் அவர் அளிக்கின்ற கொடை என்பது இதனால் விளங்குகிறது. இயேசுவைப் பின்பற்ற விருப்பம் தெரிவித்த இன்னொரு செல்வர் பற்றிய கதையை லூக்கா ஏற்கெனவே எடுத்துக் கூறியிருந்தார் (லூக் 19:18-23). ஆனால் அந்த மனிதர் தம்முடைய செல்வத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் அதையே பற்றிக்கொண்டிருந்தார். சக்கேயு இதற்கு நேர் மாறாகச் செயல்படுகிறார். அதாவது, தமது செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள அவர் முன்வருகிறார் (லூக் 19:8). சக்கேயு யார்? அவர் ''வரிதண்டுவோருக்குத் தலைவர்'' என அறிமுகம் செய்யப்படுகிறார். அக்காலத்தில் வரிதண்டுதல் என்பது எளிதில் செல்வம் சேர்ப்பதற்கு வழியாக அமைந்த ஒரு தொழில். பாலஸ்தீனத்தில் ஆதிக்கம் செலுத்திய உரோமை ஆளுநர்கள் வரிதண்டும் பொறுப்பைக் குத்தகைக்கு விட்டனர். ஆனால் வரிதண்டுவோர் மக்களிடமிருந்து அதிகமாக வரி வசூலித்தனர். எனவே, வரிதண்டுவோர் என்றாலே மக்களால் வெறுக்கப்பட்டனர். -- சக்கேயுவின் கீழ் பலர் வேலை செய்திருக்க வேண்டும். எனவேதான் லூக்கா அவரை ''வரிதண்டுவோருக்குத் தலைவர்'' என அடையாளம் காட்டுகிறார். சக்கேயு நல்ல வசதி படைத்த மனிதர். ஆனால் தான் திரட்டிய செல்வம் மக்களிடமிருந்து அநியாயமாகப் பெறப்பட்டது என்பதை அவர் ஏற்று அதற்காக மனம் வருந்துகிறார். அதே நேரத்தில் மக்களிடமிருந்து ''எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்'' என உறுதியளிக்கிறார். இவ்வாறு மனம் திரும்பிய சக்கேயு கடவுளை நாடி வந்ததை இயேசு காண்கின்றார். ''இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று'' என இயேசு அறிக்கையிடுகிறார். மனிதரின் கடந்த கால வாழ்க்கையில் பல குறைகள் இருந்தாலும், அவர்கள் அக்குறைகளை உணர்ந்ததும் மனம் திரும்பி கடவுளிடம் செல்லும்போது கடவுள் அவர்களை அன்போடு ஏற்றுக்கொள்கிறார். இதற்கு சக்கேயு சிறந்த உதாரணம். ''இழந்துபோனதைத் தேடி மீட்க வந்த'' இயேசு நம்மை இருகரம் விரித்து அழைக்கின்றார். அந்த அழைப்பை மனமுவந்து ஏற்பது நம் பொறுப்பு.

மன்றாட்டு:
இறைவா, எங்களை வரவேற்கக் காத்திருக்கும் உம்மை எந்நாளும் நாடிவர அருள்தாரும்.