பொதுக்காலம் - 34 ஆம் வாரம்

திங்கள் நவம்பர் , 26.11.2012


முதல் வாசகம்



திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 1-5

யோவான் என்னும் நான் சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர். பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசை போலும் ஒலித்தது. அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாமல் கற்பைக் காத்துக் கொண்டவர்கள். ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும் ஆட்டுக் குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள். அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை; ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 24: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 6)

பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடை யவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 24: 42,44 - அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4

அக்காலத்தில் இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார். அவர், ``இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'இக்கைம்பெண்ணோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்' என்றார்'' (லூக்கா 21:4)

இயேசு வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தால் ஓரம் தள்ளப்பட்ட மக்களுள் கைம்பெண்களும் உண்டு. கணவனே வீட்டுக்குத் தலைவன் என்னும் கருத்து நிலவிய அக்காலத்தில் பெண்கள் கணவனுக்கும் வீட்டிலுள்ள பிற ஆண்களுக்கும் கட்டுப்பட்டே நடக்கவேண்டியிருந்தது. நற்செய்தியில் வருகின்ற கைம்பெண் இவ்வாறு சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட ஒருவராகவே இருந்தார். ஆனால் அவர் கடவுளின் இல்லமாகிய எருசலேம் கோவிலுக்குச் செல்கிறார். அங்கே காணிக்கை செலுத்துகிறார். அவர் அளித்த காணிக்கை மிகச் சிறியதுதான். ஆனால் அவருடைய தாராள உள்ளத்திற்கு எல்லையே இல்லை. தன்னிடமிருந்து எல்லாவற்றையுமே அவர் கடவுளுக்கென்று கொடுத்துவிட்டார். கோவில் நிர்வாகத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தலைமைக் குரு, பிற குருகுலத்தார் எல்லாருமே பேராசை பிடித்தவர்கள் என நாம் கூற இயலாது. ஆனால் அவர்களில் சிலராவது ஏழை மக்களைப் பிழிந்து தங்களுக்குச் செல்வம் தேடிக்கொண்டார்கள் என அறிகிறோம் (காண்க: லூக் 20:47). -- இன்றைய சமுதாயத்திலும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் பல்லாயிரம் பேர் உண்டு. அவர்கள் சமுதாயத்தில்ல நிலவுகின்ற அநீதிகளின் காரணமாகப் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றார்கள். ஆனால் சமுதாயத்தில் நிலவுகின்ற சுய நலத்தின் காரணமாக ஒடுக்கப்படுகின்ற மக்கள் கடவுள் பெயராலும் அநீதிகளுக்கு உள்ளாக்கப்படுவது பெரும் கொடுமையே. ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள், அன்னியர் போன்றோரை வெறுத்து ஒதுக்காமல் அவர்கள் மட்டில் தனிக் கரிசனை காட்ட வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டுச் சட்டம் (காண்க: விப 22:22; இச 24:18). ஆனால் இயேசுவின் காலத்தில் பலர் இச்சட்டத்தை மறந்துவிட்டிருந்தார்கள். இயேசு கோவிலில் காணிக்கை போட்ட கைம்பெண்ணின் தாராள குணத்தைப் போற்றினார். ஏனென்றால் அக்கைம்பெண் ''தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' (லூக் 21:4). கடவுள் நம்மீது இவ்வாறே நடந்துகொள்கின்றார். அவர் தம் அன்பை நமக்கு அளந்து கொடுப்பதில்லை. அவருடைய அன்பு எல்லையற்றது; எந்தவொரு மனித அன்பையும் விட ஆயிரம் மடங்கு மேலானது. கடவுளின் எல்லையற்ற இரக்கமும் அன்பும் நம் வாழ்விலும் துலங்க வேண்டும். நம் உள்ளத்தின் நேர்மையைக் காண்கின்ற கடவுள் நாம் தாராள உள்ளத்தோடு அவரையும் அவர் மதிக்கின்ற மானிட உலகையும் அன்புசெய்திட நம்மை அழைக்கின்றார்.

மன்றாட்டு:
இறைவா, உம் அன்புப் பெருக்கு எங்கள் வாழ்வில் ஆறாய் வழிந்தோடுவதை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.