திருவருகைக்காலம் - முதலாம் ஞாயிறு

வியாழன் திசம்பர் , 06. 12 .2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6

நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர். ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 118: 1,8-9. 19-21. 25-27 (பல்லவி: 26)

பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 8 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! 9 உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27ய ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


எசா 55: 6 - அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21,24-27

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: �என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்' என்றார்'' (மத்தேயு 7:24)

அறிவாளி என்றால் யார், அறிவிலி என்றால் யார்? - இக்கேள்விக்கு விடை பழைய ஏற்பாட்டு நூல்களில், குறிப்பாக நீதி மொழி போன்ற ''ஞான இலக்கிய'' நூல்களில் காணப்படுகிறது. அறிவாளி என்பவர் ''ஞானி''; அறிவிலி என்பவர் ''மூடர்''. இவர்களை முறையே ''நேர்மையாளர்'' (''நல்லார்'') எனவும் ''தீயோர்'' (''பொல்லார்'') எனவும் விவிலியம் குறிப்பிடுகிறது (காண்க: நீமொ 12:5-15). ஆக, உண்மையான அறிவும் ஞானமும் கொண்ட மனிதர்கள் கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுத்து, அதன்படி நடப்பார்கள். இயேசு தம் சீடர்களிடமிருந்து இத்தகைய நடத்தையை எதிர்பார்க்கிறார். அவருடைய வார்த்தையைக் கேட்பதோடு நாம் நின்றுவிடக் கூடாது. அதுபோலவே, அவரை நோக்கி ''ஆண்டவரே, ஆண்டவரே'' என அழைப்பதோடு நாம் நிறுத்திக் கொள்ளக் கூடாது (காண்க: மத் 7:21). மாறாக, இயேசுவின் போதனைகளை நாம் உள்வாங்கி, அதை வெளி நடத்தையிலும் எண்பிக்க வேண்டும். அப்போது, நாம் கேட்ட இறைவார்த்தை நம் வாழ்வில் எதார்த்தமாகும். வெறும் சொல்லளவில் நிற்போர் பெரிய சாதனைகளை நிகழ்த்த இயலாது. மாறாக, சொல்லும் செயலும் இணையும்போதுதான் அங்கே நலமான விளைவுகள் ஏற்படும். -- இயேசுவின் போதனை நம் உள்ளத்தில் மாற்றம் கொணர வேண்டும். அந்த மாற்றம் வெறும் உள்ளளவிலேயே நின்றுவிடக் கூடாது. மாறாக, நம் உள்ளத்தை மாற்றுகின்ற அதே வார்த்தை நம் செயல்களையும் அதற்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும். இயேசு நமக்குப் ''பாறை'' போன்ற உறுதியான அடித்தளமாக இருக்கின்றார். அந்த அடித்தத்தின்மீது நம் வாழ்க்கை எழும்போது அது உறுதியாக நிலைக்கும். அடித்தளமே ஆட்டம் கண்டுவிட்டால் அதன்மீது கட்டப்பட்ட கட்டடம் தகர்ந்துவிழும். அந்நிலை நமக்கு ஏற்படாதவாறு நாம் கவனமாயிருக்க வேண்டும். பாறைமீது வீடு கட்டினால் அந்த வீட்டின் அடித்தளம் உறுதியாக இருக்கும். இயேசுவின் போதனை நமக்கு உறுதியான அடித்தளமாகும்போது நாம் நிலைகுலைந்து விழ மாட்டோம். ஏனென்றால் நாம் தடுமாறுகிற வேளைகளிலும் இயேசு நம்மைத் தாங்கிக் கொள்வார். அவருடைய போதனை நமக்கு அரணாக இருந்து நமக்குப் பாதுகாப்பாக அமையும். உறுதியான அடித்தளம் இருந்தால் நம் வாழ்வில் ஏற்படுகின்ற துன்பங்களைக் கண்டு நாம் அச்சமுற மாட்டோம். மாறாக, நமக்காகத் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் ஒரு குற்றவாளி போல உயிர்துறந்த இயேசு தம்மை எதிர்கொண்டு வந்த துன்பங்களைக் கண்டு பயந்து ஓடவில்லை. மாறாக, அவர் துன்பத்தைத் தழுவிக் கொண்டார். நாமும் இயேசுவைப் பின்சென்று, துன்பங்களைத் தாங்கிக்கொண்டால் நம் கட்டிய வீடு உறுதியாய் இருக்கும்.

மன்றாட்டு:
இறைவா, நாங்கள் உம்மையே அடித்தளமாகக் கொண்டு எழுந்த இல்லம் என உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.