திருவருகைக்காலம் - முதலாம் ஞாயிறு

சனி திசம்பர் , 08. 12 .2012


தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா


முதல் வாசகம்



தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, ``நீ எங்கே இருக்கின்றாய்?'' என்று கேட்டார். ``உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்'' என்றான் மனிதன். ``நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?'' என்று கேட்டார். அப்பொழுது அவன், ``என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்'' என்றான். ஆண்டவராகிய கடவுள், ``நீ ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், ``பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்'' என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், ``நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்'' என்றார். மனிதன் தன் மனைவிக்கு `ஏவாள்' என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 98: 1. 2-3யb. 3உ-4 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உ உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி



இரண்டாம் வாசகம்


திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி





நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 1: 28 - அல்லேலூயா, அல்லேலூயா! அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள்நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்'' (லூக்கா 1:28)

அன்னை மரியாவை இயேசுவின் தாய் எனப் போற்றுகின்ற திருச்சபை அதே அன்னையைக் ''கடவுளின் தாய்'' எனவும் வாழ்த்திப் புகழ்கின்றது. கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனையை நாம் மரியாவுக்கு வழங்குவதில்லை. ஏனென்றால் மரியா கடவுளின் படைப்பு. கடவுளுக்கு நிகரான நிலை அவருக்குக் கிடையாது. ஆனால் கடவுளின் திருமகனாகிய இயேசுவை அந்த அன்னை இந்த உலகிற்குப் பெற்றுத் தந்தார். எனவே, அவருக்குச் சிறப்பு மரியாதை செலுத்துவது பொருத்தமே என திருச்சபை கற்பிக்கிறது. வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றுகிறார். ''அருள்மிகப் பெற்றவரே'' என்று கூறி அவரை வாழ்த்துகிறார் (காண்க: லூக் 1:28). பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் ''அருள்நிறைந்தவளே, வாழ்க'' என்று இலத்தீன் பாடத்தின் நேர் தரவாக இருந்தது. புராட்டஸ்டாண்டு சபையினரின் பெயர்ப்பில் ''கிருபை பெற்றவளே, வாழ்க'' என்றுள்ளது. உண்மையிலேயே கடவுள் மரியாவுக்கு ஒரு சிறப்பான மாண்பை அளித்தார் என்பதில் ஐயமில்லை; அதற்கான விவிலிய ஆதாரமும் உள்ளது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை மரியாவைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி வழிபடுகிறது என்று சிலர் குற்றம் காண்கிறார்கள். இவ்வாறு குற்றம் காண்பது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். அண்மையில் ஒரு வலைப்பதிவில் கண்டது இது: கேள்வி: ''மரியாளை வணங்கக் கூடாது (றழசளாippiபெ ஆயசல ளை ளin) என உரோமன் கத்தோலிக்கர்களுக்கு விளக்குவது எப்படி?'' இதற்கு தரப்படுகின்ற பதில்: ''இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான். அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்க வேண்டுமென்றால் ஒரு பாத்திரம் (உழழமநச) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிட வேண்டும். பாத்திரத்தை (உழழமநச) அல்ல. மரியாள் பாத்திரம். இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்துச் சாப்பிடுவது போன்று இருக்கிறது''. -- மேலே தரப்பட்ட மேற்கோளிலிருந்து நாம் அறிவது என்ன? சிலர் கத்தோலிக்கர் பற்றி உண்மையிலேயே தவறான கருத்துக் கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. கத்தோலிக்கர் மரியாவைக் கடவுளாகக் கருதுவதும் இல்லை, நம் மீட்பரும் இடைநிலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிகராக மரியாவைக் கொள்வதும் இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) இந்த உண்மையை அழகாக எடுத்துரைக்கிறது. திருச்சபை வழக்கில் கடவுளுக்கு நாம் அளிக்கின்ற வழிபாடு ''ஆராதனை'' (யனழசயவழைn) எனவும் மரியாவுக்கு நாம் அளிக்கின்ற மரியாதை ''வணக்கம்'' (எநநெசயவழைn) எனவும் கலைச்சொற்களால் குறிக்கப்படுகின்றன. இதோ வத்திக்கான் சங்கம் தரும் போதனை: ''திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் (எநநெசயவழைn) தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில்...இவர் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் 'கடவுளின் தாய்' என்றழைத்து வணங்கினர்... திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே தனிப்பட்டது; மனிதரான வாக்குக்கும் தந்தைக்கும் தூய ஆவியார்க்கும் நம் அளிக்கும் ஆராதனையிலிருந்து (யனழசயவழைn) உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது; இந்த ஆராதனையை (யனழசயவழைn) இவ்வணக்கம் (எநநெசயவழைn) மிகச் சிறந்தவிதமாய் ஊக்குவிக்கும் எனலாம்'' (திருச்சபை, எண் 66).

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனின் தாயாக நீர் தேர்ந்தெடுத்த அன்னை மரியாவிடம் துலங்கிய ஆழ்ந்த நம்பிக்கை எங்கள் வாழ்விலும் விளங்கிட அருள்தாரும்.