திருவருகைக்காலம் நான்காம் வாரம் ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 18-12-2011


கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை



திருப்பலி முன்னுரை


கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு !
இன்று கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். ஒரு வகையில் பார்த்தால், இந்த விழாதான் திருச்சபையின் பிறப்பு விழா எனக் கருதப்படலாம். இறைவனின் திட்டத்துக்கு அன்னை மரியா "ஆம்"; என்று சொன்னதால்தான், இயேசு பிறந்தார். திருச்சபையும் தொடங்கியது. ஆம், மீட்பின் வரலாறே ஒரு பெண்ணின் "ஆம்" என்ற சொல்லில்தான் தொடங்கியது என்பது வியப்பு தரும் செய்திதான். பல நேரங்களில் வரலாற்றின் மாபெரும் திருப்பு முனைகள் சிறிய நிகழ்வுகளில்தான் தொடங்கின என்பதை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது அறிய வருகிறோம். அதுதான் இறையாற்றல்! அதுதான் இறைத் திருவுளம்! வல்லமை புனிதம் உடையவர் பெரியனவற்றைச் செய்கிறார். சிறியவற்றில் நம்பிக்கை உடையவராய் இருப்பவர்களை ஆண்டவர் பெரியன நிகழ்த்துவதற்காகப் பயன்படுத்துகிறார். இன்றைய நாளில் நாம் சிறியவற்றில் இறைவனுக்கு நம்பிக்கை உடையவர்களாக வாழ உறுதி எடுப்போம். "ஆம்" என்பதே நம் விடையாகட்டும். அன்னை மரியாவின் சிறு மொழியில் பெரியன செய்த ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் சிறியவற்றில் உமக்கு நம்பிக்கைக்குரியவர்களாக வாழவும், அதன் வழியாக உமது திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கவும், விரும்பினால் வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த மனதோடு இயேசுவின் பிறப்பிற்காக காத்திருந்து, விழித்திருந்து, செபத்தில் நிலைத்திருந்து தகுந்த தயாரிப்போடு இருக்கவும், நமது உள்ளம் நமது மனம் அருள்நிறைந்ததாக அதாவது நூற்றுக்கு நூறு பரிசுத்தமாக இருந்தால் நமது உள்ளத்திற்குள், மனதுக்குள் இயேசு பிறப்பார். இயேசு பிறப்பு விழாவிற்கு வெளி அலங்காரத்தைவிட உள் அலங்காரம் தேவை. நமது கடவுள் மக்கள் நடுவே வாழ ஆசைப்படும் கடவுள். எனவே பிறக்க இருக்கும் இயேசுபாலன் நம்மோடு வாழ வேண்டுமென்றால் இறையருளால் நமது ஆன்மா நிரப்பப்பட வேண்டும். அந்த ஆவியானவரின் அருளைப் பெற தொடரும் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.


முதல் வாசகம்


முதல் வாசக முன்னுரை:
கடவுள் மக்கள் நடுவே வாழும் கடவுளாக தன்னை வெளிப்படுத்துகிறார். நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது உடனிருப்பால் நமது உள்ளமும், இல்லமும் நிரப்பப்படவேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவாக்குக் கூறும் கருத்தினை கேட்போம்.


இறைவாக்க்கினர் 2சாமுவேல் நூலிலிருந்து வாசகம் 7:1-5 8-12 14-16

1 அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். 2 அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, "பாரும் நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது" என்று கூறினார். 3 அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார். 4 அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. 5 நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்; நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? 8 எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்; என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். 9 நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன். 10 எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்ககாலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். 11 அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். 12 உன் வாழ் நாள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். 14 நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். 15 உன் முன்பாக நான் சவுலை விலக்கியது போல, என் பேரன்பினின்று அவனை விலக்கமாட்டேன். 16 என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திபா 89:2-5 27-29

பல்ல்லவி: "ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றென்றும் பாடுவேன்."

உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. பல்லவி
நீர் உரைத்தது; 'நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது; பல்லவி
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்' பல்லவி
ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும். பல்லவி நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன். பல்லவி


இரண்டாம் வாசகம்


இரண்டாம் வாசக முன்னுரை:
நாம் ஒவ்வொருவரும் நன்மை செய்து வாழ வேண்டும். பிறரோடு பழகும்போது அன்பாக பழக வேண்டும். நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வேண்டும் என்ற ஆழந்த சிந்தனையுடன் கருத்துக்களை கூறும் பவுல் அடிகளாரின் அறிவுரையை வாசிக்க கேட்போம்.


திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (உரோமையர். 16:25-27)

25 சகோதர சகோதரிகளே! இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 26 இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். 27 ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மாற் 11: 10
அல்லேலூயா, அல்லேலூயா! "ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றென்றும் பாடுவேன்."! அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:26-38)

26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. 28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். 29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். 30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். 31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். 32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். 34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். 35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். 36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். 37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். 38 பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்


என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள் (எரே 3:15) என மொழிந்த நல்லாயனாம் இறைவா! திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்கள் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் அனைவரையும் உண்மையின் ஒளியாகிய உம்மை நோக்கி வழிநடத்திட தேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா! எம் பங்கு மக்கள் அனைவரும் இறை அன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம் நிலவிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

“நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை மகன் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத் 28:19). வல்லமை மிக்க இறைவா! இன்னும் கிறிஸ்துவை அறியாதவர்களுக்குக் கிறிஸ்துவை அறிவித்து, மீட்பைப் பெற்றுக் கொள்ள உழைக்கவும், மறைப்பணி தளங்களிலே பணிசெய்து உம் நற்செய்தியை உலகெங்கும் கொண்டு செல்லவும் ஆர்வம் மிக்க உள்ளங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியாம் எம் இறைவா! எங்களது வாழ்வு என்னும் பாதையில் நீரே ஒளியாக இருந்து வழிகாட்டவும், அந்த ஒளியிலே நாங்கள் நடந்து எங்கள் வாழ்வில் மற்றவர்களுக்கு வழிகாட்டவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.மனமாற்றத்தை விரும்பும் இறைவா! உம் பிறப்பிற்காகத் காத்திருக்கும் நாங்கள் எங்கள் பழைய இயல்புகளைக் கலைந்து புதிய மனிதர்களாக மாறி இந்த உலகத்தை உம் பாதையில் கொண்டுவர எங்களுக்கு உமது அருளையும் ஆசீரையும் பொழிந்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.வார்த்தையாம் எம் இறைவா! வாழ்வு தரும் இறைவார்த்தையை நாங்கள் எங்கள் உணவாகவும் உயிராகவும் ஏற்று வாழவும், அதைத் தியானித்து வாழ்வதன் மூலம் மற்றவர்களையும் வாழவைக்கவும் வேண்டிய அருளைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.