ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா திருப்பலி

இரண்டாம் ஆண்டு 06-01-2012


ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா.



மூன்று ஞானிகளின் வருகை.



திருப்பலி முன்னுரை


கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே!
கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடிய ஒரு சில நாட்களுக்குப் பின் நாம் திருச்சபையோடு இணைந்து திருக்காட்சி, மூன்று அரசர்கள் பெருவிழாவினை கொண்டாடுகிறோம். ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா, கிறிஸ்துமசைத் தொடர்ந்து வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (08-01-2012) இன்று கொண்டாடப்படுகிறது. இயேசுவை ஆராதிக்க வந்த மூன்று ஞானிகள், பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகிய காணிக்கைகளை அவருக்கு கொடுத்தனர்.
பொன் அரசராகவும்
சாம்பிராணி கடவுளாகவும்
வெள்ளைப்போளம் மனிதராகவும்
இயேசுவை அடையாளமும் காட்டுகின்றன. இந்த நாள் இயேசு தன்னையே உலகிற்கு ஒளியாக வெளிப்படுத்திய நினைவு நாள். ‘உலகின் மீட்பர்’ (யோவா 4:42) தான் உதித்த யூத குலத்திற்கும், நாட்டிற்கும் அப்பாற்பட்டு, ‘உலகனைத்திற்கும் உரியவன் நான்’ எனப் பறைசாற்றும் நாள். புறவினத்தார்க்கு மூடியிருந்த மீட்பின் கதவுகள் அன்பிறைவன் கிறிஸ்து இயேசுவால் திறக்கப்பட்ட நாள் இந்நாள். இவர் இஸ்ரயேல் குலத்தில் பிறந்திருந்தாலும் தன்னை எல்லா மக்களுக்கும் ‘தானே இறை மீட்பர்’ என்று புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தி தன்னுடைய மீட்பு திட்டத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கிறார். இன்றைய சூழ்நிலையில் நாம் இறைபிரசன்னத்தை உணர்ந்து, பிற மக்களும் கிறிஸ்துவை அறிய, கிறிஸ்துவுக்குள் வாழ கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோமா? என்பதை சிந்திக்க அழைக்கின்றது இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள்.
ஞானிகள், அரசர்கள் என்று உலகத்தால் போற்றக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்கள் சிறு குழந்தையிடம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள் (மத் 2:11). ஆம், இயேசு கிறிஸ்து என்ற ஒளியை வாழ்வில் காண ஆர்வத்தோடு தேடிச் சென்று கண்டார்கள். எனவே நாம் எந்த மனநிலையோடு ஆர்வத்தோடு இயேசுவை தேடி செல்கிறோமோ அந்த அளவுக்குதான் கண்டடைவோம்.
மனதில் செருக்கில்லாமல், ஆணவமில்லாமல் தாழ்ச்சியோடும் பணிவோடும் இயேசுவை தேடுகின்றபோது உன்னத ஒளியாம் இயேசுவை கண்டடைவோம் ஞானிகளைப்போல. ஏனென்றால் ஒளியானது பாவ இருளை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளை புறங்காணச் செய்யும், இருண்ட இதயத்தில் நம்பிக்கை தீபத்தை ஏற்றும், பகைமையை நீக்கி பாசத்தை பெருக்கும். இப்படிப்பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர் புறவினத்த்து ஞானிகள் (மத் 2:11).
ஏரோது தவறான எண்ணத்தோடு தேடியதால் இயேசுவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள், இன்னல்கள் மத்தியிலும் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் இயேசுவை ஞானிகள் தேடினார்கள் ஒளியாம் கிறிஸ்துவை கண்டார்கள். கிறிஸ்து என்னும் வாழ்வின் ஒளி திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் நமது சுய நலப்போக்கினால், தான், தனக்கு, என்னுடையது, எனக்கு என்ற பேராசை எண்ணத்தினால், வளர்ந்துவரும் அறிவியல் மாற்றத்தினால், நுகர்வு கலாச்சாரத்தினால், உள் ஒன்றும் புறம் ஒன்றும் பேசுவதினால், மற்றவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதினால் இருளின் ஆதிக்கம் வாழ்வின் ஒளியை மறைத்துக் கொண்டுள்ளது. எனவே கிறிஸ்து என்னும் ஒளி நமக்குள் இருக்குமானால் நாம் ஒளியின் மக்களாக, அன்பின் மக்களாக, சமாதானத்தின் மக்களாக இருப்போம். நம்மில் இருக்கும் தீய எண்ணங்கள், தீய குணங்கள், மனக்கவலைகள் போன்றவற்றை நீக்கி இடையர்களைப்போல, ஞானிகளைப் போல நம்பிக்கையோடு இயேசு என்னும் ஒளியைத்தேடுவோம். வாழ்வு பெறுவோம். எனவே நம்முடைய உள்ளத்திலும், இல்லத்திலும் இயேசு என்னும் ஒளியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைவோம், வாழ்வு பெறுவோம். எனவே அனைவரும் இறைவெளிப்பாட்டை, இறைபிரசன்னத்தை உணர எனது பங்களிப்பை கொடுப்பேன் என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.


முதல் வாசகம்


முதல் வாசக முன்னுரை:
இஸ்ரயேல் மக்கள் பிற நாட்டவரால் அடிமைகளாக பல வழிகளில் நசுக்கப்பட்டனர். சொந்த நாட்டையும், வழிபட்டு வந்த கோவிலையும் இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஆண்டவர் பிற இனத்தவரும் உன் ஒளி நோக்கி வருவர், எருசலேமே எழுந்து ஒளிவீசு! என்று இறைவாக்கினர் எசாயா மூலம் நம்பிக்கை ஊட்டுவதை இவ்வாசகத்தில் கேட்போம்.


எசாயா எழுதிய நூலிலிருந்து முதல் வாசகம் 60:1-6

1 எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! 2 இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! 3 பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். 4 உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். 5 அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். 6 ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திபா 72(71),2.7-8.10-11.12-13.

பல்லவி: "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் "!"

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! (சேலா) பல்லவி
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. பல்லவி

ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். பல்லவி

எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். பல்லவி



இரண்டாம் வாசகம்


இரண்டாம் வாசக முன்னுரை:
புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் புனித பவுலடியார் பிற இன மக்களும் கிறிஸ்து இயேசுவை அறிந்து புதிய உடன்படிக்கையின் பங்காளிகளாக மாறுகின்றனர் என்று இவ்வாசகத்தில் கூறுகின்றார்.


திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் (Epheser 3,2-3a.5-6.)

சகோதர சகோதரிகளே! 2 உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். 3 அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப்பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 4 அதை நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்து கொண்டேன் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். 5 அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 6 நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள். 7 கடவுள் வல்லமையோடு என்னுள் செயல்பட்டு எனக்கு அளித்த அவரது அருள்கொடைக்கு ஏற்ப, அந்த நற்செய்தியின் தொண்டன் ஆனேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத்தேயு 2,1-12.
அல்லேலூயா, அல்லேலூயா! "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் "! அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:43-51

1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 2 யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள். 3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. 4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். 5 அவர்கள் அவனிடம் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். 6 ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் என்றார்கள். 7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். 8 மேலும் அவர்களிடம். நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். 9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. 10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். 11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். 12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்பின் இறைவா! எங்கள் திருதந்தை ஆயர்கள் குருக்கள் திருத்தொண்டர்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்கள் பிறந்த குழந்தை இயேசுவின் ஆசீரோடு திருச்சபையை நன்கு வழிநடத்த கிருபை தர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உலகில் வாழும் அனைத்து நாட்டு மக்களுக்கும் நீரே மீட்பராக, ஒளியாக, வழியாக, நம்பிக்கை நாதமாக உம்மை வெளிப்படுத்தியிருப்பதற்காக நன்றி கூறுகிறோம். இந்த நம்பிக்கை எங்கள் வாழ்விலும் வழிபாட்டிலும் வெளிப்பட தேவையான அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் இறைவா! நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும். தேவையான அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியாம் எம் இறைவா! எங்களது வாழ்வு என்னும் பாதையில் நீரே ஒளியாக இருந்து வழிகாட்டவும், அந்த ஒளியிலே நாங்கள் நடந்து எங்கள் வாழ்வில் மற்றவர்களுக்கு வழிகாட்டவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல்லாயனே எம் இறைவா! இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாம் வல்ல அன்புத்தந்தையே இறைவா, எம் மத்தியிலிருந்து இறந்து போன அனைவரையும், சிறப்பாக ஆழிப்பேரலை அனர்த்தத்தால் இறந்தவர்களையும், இவர்களின் பிரிவாற்றாமையால் வருந்துவோருக்கு ஆறுதலாகவும் இருந்து அவர்களை வழிநடத்துவதோடு, இறந்துபோன அனைவருக்கும் இன்பமும் ஒளியுமான இடத்தை அருளுவதோடு வறுமையினாலும் இன்னும் பலவிதத்திலும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவோருக்கும் இன்னும் எம்மத்தியில் நோய்களினாலும் பிணியாலும் வருந்துவோரை கடைக்கண் நோக்கி, இவர்கள் எவ்வகைத் துன்பங்களுக்கும் ஆளாகாதபடி காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

அன்பே உருவான இறைவா! கடந்த ஆண்டிலே பல போரழிவுகளை சந்தித்த மக்களுக்காக மக்களாக மன்றாடுகிறோம். அவர்கள் இந்த ஆண்டிலே எந்தவொரு இடர்ப்பாடின்றி வாழ தம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.