ஞாயிறு திருப்பலி

இரண்டாம் ஆண்டு 08-01-2012


ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா.



திருப்பலி முன்னுரை


கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே!!
கிறிஸ்துவில் நம்மையே நாம் முழுமையாக அர்ப்பணித்து, கிறிஸ்தவக் கோட்பாடுகளுக்கு அர்த்தங்களை கண்டுபிடிக்க ‘ஞானஸ்தானம்’ என்ற திருவருட்சாதனம் முழு பலனை நமக்கு தருகிறது. “கிறிஸ்தவன்” என்று தலைநிமிர்ந்து நாம் சொல்ல ஞானஸ்தானமே நமக்கு ஊட்டச்சத்து. இன்று ஆண்டவரின் ஞானஸ்தான விழாவை கொண்டாடுகின்றோம். “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (லூக் 3,22) என்று வானத்திலிருந்து ஒலித்த குரல், தந்தை இயேசுவின்மீது வைத்திருந்த ஆழ்ந்த அன்பை வெளிக்காட்டுகிறது. திருமுழுக்கு பெற்றநாம் ஒவ்வொருவரும், நம்முடைய இதயத்தில் தூய ஆவி வழிநடத்த இடமளிப்போம். தூய ஆவியின் வழியில் நாம் நடக்கும்போது அனைத்து தடைகளையும் இறைஇயேசுவைபோல் எதிர்த்து செயல்பட முடியும். நீரே என் அன்பார்ந்த மகன் (லூக் 3,22) என்று தந்தை மகனாகிய இயேசுவை உறுதிப்படுத்தப்பட்டதைப் போல் திருமுழுக்கு பெறும் ஒவ்வொருவரும் கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்று உறுதிப்படுத்தப்படுகிறோம். திருமுழுக்கு யோவான் திருமுழுக்கு பாவமன்னிப்பைக் கொடுக்கவில்லை, இயேசுவின் திருமுழுக்கு பாவ மன்னிப்பைக் கொடுக்கிறது. இயேசு பெற்ற திருமுழுக்கு மனந்திரும்பதலை காட்டுகிறது (மத் 3,11). அன்று யூதர்களுக்கு வழங்கப்பட்ட திருமுழுக்கு அது இயேசுவுக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் இன்று நாம் பெறும் திருமுழுக்கு இயேசுவை நம் வாழ்வில் பிரதிபலிப்பதில் அடங்கியிருக்கிறது. அதனை வாழ்வில் வெளிக்காட்டுவோம். இயேசு பெற்ற திருமுழுக்கு மாந்தர் அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஓர் அடையாளச் செயலாகும். இயேசுவின் ஞானஸ்நானம் விளிம்பு நிலைமக்கள், பாவிகள், தொழுநோயாளர் இவர்களுடன் நெருக்கமான உறவையும், தோழமையையும் எடுத்துக்காட்டும் செயலாகும். நாமும் வாழ்வில் விளிம்பு நிலைமக்கள் வலிமைபெற இத்திருப்பலியில் மன்றாடுவோம்.


முதல் வாசகம்


முதல் வாசக முன்னுரை:(எசா 42: 1-4, 6-7)
இஸ்ராயேல் மக்கள் பாபிலோன் அடிமைத்தனத்தில் இறைவனின் வருகைக்காக, பல விதமாக எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில எசாயா ஆண்டவரின் ஊழியனைப் பற்றி இறைவாக்காக கூறுகிறார். இறைவாக்கினர் எசாயா இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆவியினால் நிரப்பப்பட்டவர், நீதி, உண்மை அறத்தை நிலைநாட்ட வருகிறார். திருமுழுக்கில் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் ஆண்டவரின் ஊழியனைப் போல வாழ்கிறோமா என் எசாயா கூறுவதைக் கேட்போம்.


எசாயா எழுதிய நூலிலிருந்து முதல் வாசகம் (எசா 42: 1-4, 6-7)

1 இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். 2 அவர் கூக்குரலிடமாட்டார்; தம்குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்;டார். 3 நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார். 4 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். 6 ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். 7 பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திபா 29(28),1a.2.3ac-4.3b.9b-10.

பல்லவி: ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.!"

இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆம்! ஆண்டவருக்கே உரித்தாக்குங்கள்! பல்லவி
ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். பல்லவி
ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். பல்லவி

ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. பல்லவி

ஆண்டவரின்குரல் கேதுருமரங்களை முறிக்கின்றது; ஆண்டவர் லெபனோன் கேதுரு மரங்களை முறித்துவிடுகின்றார். பல்லவி

லெபனோனின் மலையைக் கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்; சிரியோன் மலையைக் காட்டெருமைக் கன்றெனக் குதிக்கச் செய்கின்றார். பல்லவி

ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது; பல்லவி



இரண்டாம் வாசகம்


இரண்டாம் வாசக முன்னுரை: (திப 10: 34-38)
கிறிஸ்து ஒருவரே ஆண்டவர் என் அறிக்கையிடும் நாம் அனைவரும் தூய ஆவியானவரின் அருளைப் பெற்று, இயேசுவைப் போல் தீயஆவியை வென்று, நம்மில் யாரும் வேற்றுமை பாராட்டாமல் இவ்வுலகில் நிலையான அமைதியைக் கொண்டுவர ஒற்றுமையுடன் இருந்து இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகம் அழைப்பு விடுப்பதை கவனமுடன் கேட்போம்.


திருத்தூதர் பணியிலிருந்து வாசகம் (திப 10:34-38)

34 அப்போது பேதுரு பேசத் தொடங்கி, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். 35 எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். 36 இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்றும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். 37 திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். 38 கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத்தேயு 2,1-12.
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.! அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1,7-11.

7 அக்காலத்தில் யோவான் அறிவித்ததாவது, "என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. 8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்" எனப் பறைசாற்றினார். 9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். 10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார். 11 அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அருளின் ஊற்றே இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும் தங்களின் அழைத்தலின் மேன்மையை உணர்ந்து, இறைவிருப்பத்தின்படி நடந்து மக்களi தூய ஆவியின் வழியில் நடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எல்லாம் வல்ல அன்புத்தந்தையே இறைவா, எங்கள் பங்கு மக்கள் அனைவரும் திருமுழுக்கில் கொடுத்த வாக்குறுதிகளை புதுப்பித்து இறுதிவரை இறையன்பிலும் பிறரன்பிலும் அமைதியிலும் நிலைத்து வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இவரே என் அன்பார்ந்த மகன் என்று கூறிய இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் எங்களிடத்தில் இருக்கும் சுயநலம் கோபம், தீயநெறி ஆகிய பாவ இயல்பை களைந்து ஆவியின் கொடைகளைப் பெற்று அருள் வாழ்வில் திளைத்திடும் புதுவாழ்வை மலரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒளியாம் எம் இறைவா! எங்களது வாழ்வு என்னும் பாதையில் நீரே ஒளியாக இருந்து வழிகாட்டவும், அந்த ஒளியிலே நாங்கள் நடந்து எங்கள் வாழ்வில் மற்றவர்களுக்கு வழிகாட்டவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல்லாயனே எம் இறைவா! இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் பிறப்பிடமே எம் இறைவா! எங்கள் நாட்டு அரசியல் சமுதாய தலைவர்கள் அனைவரும் மக்களை நல்வழியில் அக்கறையுடன் சுயநலமில்லாமல் செயல் திட்டங்கள் தீட்ட அதனை செயல்படுத்த அருளைதர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.