ஞாயிறு திருப்பலி - பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 22-01-2012


அழைத்தல்



திருப்பலி முன்னுரை


கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே!!
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவே என் ஆண்டவர் என்று அறிக்கையிட்டு அவரை வழிபட இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்தி அன்புடன் வரவேற்கின்றோம். இன்று பொதுக் காலம் மூன்றாம் ஞாயிறு. அருளும், அமைதியும் அருளும் நம் ஆண்டவரின் திருப்பாதத்தில் அவருடைய வார்த்தையைக் கேட்டு நிறைவுபெற ஒன்று கூடியுள்ளோம். இயேசு தன் முதல் சீடர்களை அழைத்தபோது, படகையும், வலைகளையும் விட்டுவிட்டு அவரை பின்தொடர்ந்தனர் சீடர்கள். இனி அவர்களின் நிறைவு கடல் அல்ல கடவுளே. இன்றைய திருவழிபாட்டின் வழியாக இயேசு நம்மையும் அழைக்கின்றார். அவர்களுக்கு அளித்த வாக்குறுதி: “என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ”. இந்த அழைப்பை ஏற்ற அவர்கள் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றினார்கள் என்று இன்றைய வாசகத்தில் வாசிக்கிறோம். அதே அழைப்பை இயேசு நமக்கும் தருகிறார். நம்மை மனிதரைப் பிடிப்பவராக மாற அழைக்கிறார். மீன்களைப் பிடிப்பதையே தங்கள் தொழிலாகவும், வாழ்வின் இலக்காகவும் கொண்டிருந்த மீனவர்களை இயேசு தம் சீடராக மாற்றினார். பணம், புகழ், பட்டம், பதவி, உலக இன்பங்கள் இவற்றையே குறிக்கோளாகவும், இலக்காகவும் கொண்டிருக்கும் நாமும், அவற்றை விட்டுவிட்டு, மனிதர்களை இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றும் மனிதர்களாக மாற்றும் பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள இயேசு அழைக்கிறார். உலகச் செல்வத்தில் கவனம் செலுத்திய நேரங்களுக்காக மனம் வருந்துவோம். நம்மோடு வாழும், பணி செய்யும் மனிதர்களை இயேசுவுக்காகப் பிடிப்போராக மாறுவோம். இயேசுவில் நிறைவுக்கான வரம்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். அழைத்தலின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்களையும் உமது சீடராக வாழ அழைப்பதற்காக நன்றி கூறுகிறோம். நாங்கள் உலக இன்பங்களை நாடாமல், பிற மனிதர்களை இயேசுவின் பாதம் கொண்டு சேர்க்கும் சீடர்களாக வாழ எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர் தரவேண்டுமென்று தொடரும் இத்திருப்பலியில் இறைஞ்சி மன்றாடுவோம். இறையாசீர் பெற்றுக் கொள்வோம்.


முதல் வாசகம்


முதல் வாசக முன்னுரை:(1சாமூவேல் 3:3-10 19)
நினிவே நகரத்து மக்கள் யோனாவின் வழியாக இறைவன் கூறிய வார்த்தைகளை கேட்டு உடனே மனம் வருந்தினார்கள், மனமாற்றம் அடைந்தார்கள். இறைவனும் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு அவர்களை மன்னித்து அன்பு செய்தார் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. ஓவ்வொரு நாளும் இறைவார்த்தையின் வழியாக இறைவன் நம்முடன் பேசுகின்றார். அவரின் குரலுக்கு நம்முடைய பதில் என்ன என்பதை சிந்தித்தவர்களாக இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.


யோனா எழுதிய நூலிலிருந்து முதல் வாசகம் (யோனா 3:1-5 10)

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், 'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி ' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உலத்த குரலில், ' இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் ' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திபா 25:4-9

பல்லவி: உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;"

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். பல்லவி
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; பல்லவி
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. பல்லவி

7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி



இரண்டாம் வாசகம்


இரண்டாம் வாசகம் முன்னுரை 1கொரி.7:29-31
கொரிந்து நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை மறந்துவிட்டு உலகச் செல்வங்களில் அதிகம் பற்று உடையவர்களாகவும், அவற்றில் கவனம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள். இதைக் கண்ட பவுலடியார் உலகச் செல்வங்களில் உங்கள் கவனத்தை செலுத்தாதீர்கள் ஏனெனில் அவை நிலையானது அல்ல மாறாக அழிந்துபோககூடியவை என்று கூறுகிறார். கிறிஸ்தவர்களாகிய நம்முடைய கவனம் எதன் பக்கம் இருக்கின்றது என்ற சிந்தனையுடன் இப்போது வாசிக்கப்படும் வாசகத்தை கேட்போம்.


புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து முதல் வாசகம் 1கொரி.7:29-31

அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடு நாள் இராது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மாற்கு 1:14-20
அல்லேலூயா, அல்லேலூயா! உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;! அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:14-20

நற்செய்தி யோவான் 1:35-42 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! நீர் கொடையாகக் கொடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள்: இன்றைய சவால்கள் நிறைந்த உலகின் நடுவே தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் உமது அழைப்பை சரியான முறையில் அடையாளம் கண்டு, நீர் அவர்களிடம் ஒப்படைத்துள்ள இறைமக்களை நிறையுண்மையை நோக்கி வழிநடாத்திச் செயல்படவும், உமது திருவுளம் நிறைவேற்றுவதில் அவர்கள்; மகிழ்ச்சியடையவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நல்லாயனாகிய இறைவா! எம் பங்கு மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை எப்போதும் தங்கள் கண்முன் கொண்டு வாழவும், மனித நேயத்துடன் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, மதித்துவாழ தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இவரே என் அன்பார்ந்த மகன் என்று கூறிய இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் எங்களிடத்தில் இருக்கும் சுயநலம் கோபம், தீயநெறி ஆகிய பாவ இயல்பை களைந்து ஆவியின் கொடைகளைப் பெற்று அருள் வாழ்வில் திளைத்திடும் புதுவாழ்வை மலரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் எனகே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா, எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உயர்களுக்கு உயிர் கொடுக்கம் அன்புத் தந்தையே! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

‘உமது நம்பிக்கை உன்னை குணமாக்கியது’ என்று கூறிய இறைவா, என் பங்கில் உள்ள நோயாளிகள் அனைவரும் உம்மையே நம்பியுள்ளனர். அவர்களை குணப்படுத்தும். அவர்கள் குணமடைந்து மீண்டும் தங்கள் பணிகளை தொடர தேவையான சக்திகளை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

‘விண்ணரசு சிறுபிள்ளைகளுக்கே உரியது’ என்று உரைத்த இறைவா, சிறுவர் சிறுமிகளை உமது கரத்தில் ஒப்படைக்கின்றோம். அவர்கள் பெற்றோர்களுக்கு கீழ்படிந்து வாழவும் ஞானத்திலும், பக்தியிலும் வளரவும் உமக்கு உகந்த பிள்ளைகளாக வாழவும் தேவையான வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.