ஞாயிறு திருப்பலி - பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 19-02-2012


பாவங்களை மன்னிக்கும் அதிகாரம்

நீ எழுந்து உன்னுடைய படுக்கையை 
 எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ


திருப்பலி முன்னுரை


ஆண்டவர் இயேசுவின் அன்புள்ள சகோதரர்களே,சகோதரிகளே!

ஆண்டின் பொதுக்காலம் 7 ஆம் வாரத்தில் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவருக்கும் திருமகன் இயேசுவின் பெயரால் என் வணக்கத்தையும் வாழ்த்தையும் உரித்தாக்குகிறேன். வாழ்க்கை மாற்றம் பெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது இன்றைய நற்செய்தி. மன்னிப்பதே வாழ்க்கை. மனித வாழ்க்கை மன்னிப்பதில் இருக்கிறது. மனித வாழ்க்கையின் முழுமை. இறைவன் எப்போதும் மன்னிக்கிறார். மனிதன் வாழ்வு பெறுகிறான். இறைவனின் பெயரை மன்றாடி வருபவருக்கு இரக்கமும், பாவமன்னிப்பும், மன்னிப்போடு வாழ்வும் கிடைப்பதை உறுதியளிக்கிறது. விபச்சாரத்தில் பிடிபட்ட பெண், சக்கேயு, முடக்குவாதக்காரன் இவர்களெல்லாம் சமுதாயத்தையும், நம்மை சுற்றி இருந்தவர்களையும், மன்னித்துவிட்டு, இறைவனிடம் மன்னிப்பைத் தேடி வந்தார்கள். மன்னிக்கப்பட்டார்கள். வாழ்வு கிடைத்தது. பெத்தானியாவில் அவர் சீமோன் வீட்டில் இருந்தபோது, பெண்ணுக்கு பாவங்கள் மன்னிக்கப்பட்டன. நம்பிக்கையோடு கேட்டவர்களுக்கு உடல் நலனோடு உள்ள நலமும் கிடைத்தது. இன்றைய நற்செய்தியிலும் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்த முடக்குவாதக்காரனுக்கும் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. வாழ்வு கிடைத்தது.

ஆலயத்தில் செபித்துக்கொண்டிருந்தவனிடம் வானதூதர் தோன்றி ஒரு பட்டியலைக் காட்டினார். கடவுளை அன்பு செய்வோரின் பெயர்கள் அதில் இருந்தன. அதில் அவனது பெயர் இல்லை. வருந்தினான். கவலைப்படாதே. இதோ இன்னொரு பட்டியல் என்று இன்னொரு பட்டியலை நீட்டினார் வானதூதர். அதில் கடவுள் யாரை அன்பு செய்கிறார் என்ற பட்டியல் இருந்தது. அதில் அவன் பெயர் இருந்தது. மகிழ்ந்தான். மகிழ்ந்தான் மகிழ்ச்சி கொண்டான். பிறரை அன்பு செய்ய, ஏற்றுக்கொள்ள மொத்தத்தில் பிறரை மன்னித்து வாழ்வதில்தான் கடவுளின் மன்னிப்பு நமக்கு கிடைக்க வழி இருக்கிறது. எழுத எழுத சித்திரம் வரும் இறைக்க இறைக்க நல்ல நீர் சுரக்கும். மன்னிக்க மன்னிக்க மனக் கவலைகளும் மாறும். மன்னிப்போம் மறப்போம். இறைவன் என்னை மன்னிக்கிறார். நான் எப்போது பிறரை மன்னிக்கப்போகிறேன்?

இறை இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டவர் இயேசுவிடம் சென்றால் வேண்டியது கிடைக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு முடக்குவாதமுற்ற மனிதனை தன்னிடம் கொண்டுவந்ததை கண்ட இயேசு அவனைக் குணப்படுத்துகிறார். மிகுந்த நம்பிக்கையோடும், தோழமை உணர்வோடும் பிணியாளரைத் தூக்கி வந்த நண்பர்களை போன்று இருந்தால் இன்றும் அதிகமாக நம்பிக்கை, விசுவாசம் கொண்டு பிறரை அன்பு செய்ய வரம் வேண்டுவோம். உள்ளத்திலே பொறாமை, தீய எண்ணம் ஆகியவைகளை கொண்டு வெளியில் நடக்கும் நன்மைகளை தீமையாகப் பார்த்துப் பிளவுகளை ஏற்படுத்துகின்ற மறைநூல் அறிஞரை போன்று இருந்தோமென்றால்...............................

இறைவன் நம் அனைவரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.


முதல் வாசகம்


முதலாம் வாசகம் எசாயா43:18-19,21-22,24-25
முதல் வாசக முன்னுரை:
நம் முன்னோரின் கடவுள் பழிவாங்குபவராகவும், தண்டிக்ககூடியவராகவும் இல்லை மாறாக பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வதுபோல அவர் நம் பாவங்களை மன்னித்து புது வாழ்வை அருள்வார் என்று இறைவாக்கினர் எசாயாவிடம் கடவுள் கூறுவதை வாசிக்க கேட்போம்.


எசாயா ஆகமத்திலிருந்து முதலாம் வாசகம். 43:18-19,21-22,24-25

முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்: முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்:இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்:இப்பொழுதே அது தோன்றிவிட்டது: நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்: பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர். ஆனால் யாக்கோபே, நீ என்னை நோக்கி மன்றாடவில்லை: இஸ்ரயேலே, என்னைப் பற்றிச் சலிப்புற்றாயே! பணம் கொடுத்து நீ எனக்கென்று நறுமணப்படையல் வாங்கவில்லை: உன் பலிகளின் கொழுப்பால் என்னை நிறைவு செய்யவில்லை: மாறாக, உன் பாவங்களால் என்னைத் தொல்லைப்படுத்தினாய்: உன் தீச்செயல்களால் என்னைச் சலிப்புறச் செய்தாய். நான், ஆம், நானே, உன் குற்றங்களை என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்: உன் பாவங்களை நினைவிற் கொள்ள மாட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திபா 41:1-4 12-13

பல்லவி: 'ஆண்டவரே, என்னைக் குணப்படுத்தும்; உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்'

1 எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்; துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார். பல்லவி
2 ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்; நெடுங்காலம் வாழவைப்பார்; நாட்டில் பேறுபெற்றவராய் விளங்கச் செய்வார்; எதிரிகளின் விருப்பத்திற்கு அவரைக் கையளிக்க மாட்டார். பல்லவி
3 படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில் ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்; நோய் நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார். பல்லவி

4 'ஆண்டவரே, எனக்கு இரங்கும்; என்னைக் குணப்படுத்தும்; உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்' என்று மன்றாடினேன். பல்லவி

12 நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்; நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்; உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர். பல்லவி

13 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவராக! ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவராக! ஆமென்! ஆமென்! பல்லவி



இரண்டாம் வாசகம்


இரண்டாம் வாசகம் முன்னுரை: 2கொரி. 1:18-21
கிறிஸ்து கூறிய 'இரு புதல்வர்கள் உவமையில்' அவர் குறிப்பிடாத மூன்றாவது மகனையும் நாம் நினைத்துப் பார்ப்பதில் தவறு இல்லை. ஆம் மூன்றாம் மகன் அப்பாவிடம்'நான் வேலைக்குப் போகிறேன்' என்று சொன்னது மட்டுமல்ல, வேலைக்குப் போகவும் செய்தார். அவர்தான் கிறிஸ்து. இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது, 'கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார். கிறிஸ்து ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் பேசுபவர் அல்ல அவர் எப்பொழுதும் கடவுளுடைய விருப்பத்திற்கு 'ஆம்' என்று சொல்லி அதன்படி நடந்த அன்பு மகன். கடவுளுக்கு அவர் கீழ்ப்படிந்து சிலுவைச் சாவை ஏற்றதால் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்து மகிமைப்படுத்தினார். எவரும் எளிதாக வாக்குறுதி கொடுத்துவிடலாம். ஆனால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது மிகவும் கடினம் என்கிறார் வள்ளுவர்.

சொல்லுதல் யாவர்க்கும் எளிய, அரியதும்

சொல்லிய வண்ணம் செயல் (குறள் 664)

உண்மைக்கு சாட்சியம் கூறுவதே எனது பணி என்று மொழிந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, ஒரே நேரத்தில் ஆம் என்றும் இல்லையென்றும் பேசவில்லை. அதேப்போன்று தான் கடவுளின் ஊழியனாகிய நானும் என் உடன் ஊழியர்களும் இருந்தோம். ஆகவே நீங்களும் உண்மைக்கு சான்று பகர்ந்து கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் உறவை உறுதிப்படுத்தி தூய ஆவியை பெற்றுக்கொள்ள நம்மை நாமே தயாராக்குவோம் என்று புனித பவுலடியார் கூறுவதை வாசிக்க கேட்போம்.


புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (2கொரி. 1:18-21)

நான் ஒரே நேரத்தில் "ஆம்" என்றும் "இல்லை" என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே. நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் "ஆம் " என்றும் "இல்லை " என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் "ஆம் " என உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் "ஆம் " வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக "ஆமென் " எனச் சொல்லுகிறோம். கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்: இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


நற்செய்தி மாற்கு 2:1-12
அல்லேலூயா, அல்லேலூயா! 'ஆண்டவரே, என்னைக் குணப்படுத்தும்; உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்' அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (மாற்கு 2:1-12)

சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம்,"மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன " என்றார்.அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு கண்ணுவதை இயேசு தமமுள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன " என்பதா? "எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் " என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,"நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ "என்றார்.அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே " என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அனைவரும் என்னைப் போல் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள்,கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்

நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும்,வறுமையினாலும் பாதிக்கப்பட்டு துன்புறுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! நாங்கள் ஒவ்வொருவரும், உமது வழியை அறிந்துகொண்டும், நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொண்டும், உம்மீது உறுதியான விசுவாசம் கொண்டும் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் எனகே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா, எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாக்கின்றவரும், எம் உயிரை என்றும் காத்திடுகின்றவரும், நாம் போகும் போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் எம்மைக் காத்தருள்பவருமான தந்தையே! அவதியுற்று அல்லலுறும் எம் தமிழ் மக்கள்மீது மனமிரங்கி நாங்கள் ஏங்கித் தவிக்கின்ற முழுமையான விடுதலை வாழ்வை எங்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உயர்களுக்கு உயிர் கொடுக்கம் அன்புத் தந்தையே! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் பிறப்பிடமே எம் இறைவா! எங்கள் நாட்டு அரசியல் சமுதாய தலைவர்கள் அனைவரும் மக்களை நல்வழியில் அக்கறையுடன் சுயநலமில்லாமல் செயல் திட்டங்கள் தீட்ட அதனை செயல்படுத்த அருளைதர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.