ஞாயிறு திருப்பலி - தவக்காலம் 2 ஆம் ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 04-03-2012


மாற்றம் உடலிலா? உள்ளத்திலா?

என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். /> என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்


திருப்பலி முன்னுரை


ஆண்டவர் இயேசுவின் அன்புள்ள சகோதரர்களே, சகோதரிகளே!

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்: இன்று தவக் காலம் இரண்டாம் ஞாயிறு. இயேசுவின் பிரசன்னத்தில் விசுவாசத்தோடும், வேண்டுதல்களோடும் ஒன்று கூடியுள்ளோம்.

''அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவி சாயுங்கள்'என்று ஒரு குரல் ஒலித்தது'' (மாற்கு 9:7)

தவக்காலம் ஆரம்பித்து விட்டது. ஆண்டவர் இயேசுவை எமது வாழ்வின் ஆதாயமாக்கி வாழ உருவாக்கப்படும் உன்னதமான ஒரு தருணம் இது. இரண்டு வாரங்களுக்கு முன்பு விபூதிப்புதன் அன்று எமது நெற்றியில் சாம்பல் இட்டு நாங்கள் எமது தவத்தை ஆரம்பித்தோம். ஆண்டவர் இயேசுவோடு நெருக்கமாகப் பயணித்து அவரின் பாடுகள், மரணம் என்பவற்றில் நாம் பங்குகொண்டு கடவுளை நோக்கி எமது வாழ்வை இன்னும் திடப்படுத்தி பயணிக்க இந்தக்காலம் எமக்கு உறுதியும் மனத்திடனும் தருகின்ற ஒரு அற்புதமான ஒரு காலம். இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து கதிரவனை போல ஒளி வெள்ளத்தில் காட்சி அளித்தார் என்று கூறப்படுகிறது. கடவுள் "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் " என்று கூறுகிறார். இதனை கேட்கும்போது, இந்த உருமாறுதல், ஒவ்வொரு முறையும் திருப்பி நடக்கிறது. இதன் மூலம் நம் விசுவாசம் இன்னும் அதிகமடைகிறது. எப்படியிருந்தாலும், இப்போது, நாம் தான் உருமாறப்படுகிறோம். இந்த தவக்காலத்தில், நமது பாவங்களுக்காக வருத்தப்பட்டு திருந்தும் நேரத்தில், யேசுவின் ஒளி, நமது பாவ இருட்டில், முழுமையாக ஒளிரச் செய்து அவரை நம் உள்ளத்தில் ஏற்று கொள்ளும்போது, நம்மை சுற்றி இருக்கும் நம் சகோதரர்கள் நம்மில் யேசுவை காண்பர். நாமும் யேசுவோடு சேர்ந்து ஒளிர்வோம். உருமாற்றம் இயேசுவின் வாழ்வின் மிகப்பெரும் இரகசியங்களில் ஒன்று. மூன்று சீடர்கள் மட்டும் இந்த விசேடமான கொடையை தமது வாழ்வில் கண்டு கொண்டார்கள் . அவர்களின் கண்கள் இந்த கொடையைக்கண்டு கொண்டன. சாதாரண ஒரு மனித வாழ்வு எப்படி மாறும் என்பது எமக்கு தெரியாது. ஆனால் கடவுளின் பிரசன்னம் இருக்கும் ஒருவரின் வாழ்வு நிட்சயம் அதீத ஒரு இறை பிரசன்னத்தால் நிரப்பப்படும் என்பது இங்கு தெளிவு. பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சிகளின் போது அவரோடு கூட இருந்தார்கள். எடுத்துக்காட்டாக, பேதுருவின் மாமியார் குணமடைந்தபோதும், தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகள் உயிர்பெற்றெழுந்தபோதும், கெத்சமனித் தோட்டத்தில் இயேசு இறைவேண்டல் செய்தபோதும், இயேசுவோடு கூடச் சென்றவர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரே. இவர்கள் இயேசு தோற்றம் மாறிய வேளையிலும் அவரோடு இருந்தார்கள். அப்போது இயேசு யார் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. வானிலிருந்து வந்த குரல் இயேசுவை அடையாளம் காட்டுகிறது;

''இயேசு கடவுளின் மகன்''

இயேசுவின் போதனைக்குச் செவிமடுப்போர் கடவுளின் குரலுக்கே செவிமடுக்கின்றனர் என்னும் உண்மை இங்கே வெளிப்படுகிறது. வானில் தோன்றிய மேகம் கடவுளின் பிரசன்னத்திற்கு அடையாளம். எனவே, இயேசுவுக்கும் அவர் தந்தை என அழைத்த கடவுளுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததை நற்செய்தி சுட்டுகின்றது. இன்று இயேசுவின் சீடராக வாழ்வோர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க அழைக்கப்படுகின்றனர். இயேசுவின் போதனையை நாம் ஏற்று அதற்கேற்ப வாழும்போது அது நம் உள்ளத்தையும் இதயத்தையும் உருமாற்றுவதோடு நம்மைப் புதுப் பிறப்புகளாகவும் மாற்றும். கடவுளின் புத்துயிரைப் பெறும் நாம் அதைப் பிறரோடு பகிர்ந்திட முன்வருவோம். மனிதனுக்குள் இறைவனின் மாட்சிமை பொதிந்திருக்கின்றது. உலகில் பல நெருக்கடியான சூழ்நிலைகளிலும் பணிகளிலும் நாம் இந்த மேன்மையை உணர்வதில்லை. இறைமகன் இயேசு தமது மாட்சிமையை உருமாற்றத்தின்பொது வெளிப்படுத்துகின்றார். நம்மில் தீமைகள் அளிந்தால் மாட்சிமை வெளிப்படும். இயேசுவுடன் இணைந்திடுவோம் தீமைகளை அழித்திடுவோம், இறைவனின் மாட்சிமை நம்மில் துலங்கிடச் செய்திடுவோம். எங்கள் உள்ளங்களில் ஒலிக்கின்ற இயேசுவின் குரலுக்கு நாங்கள் எப்போதும் செவிசாய்த்திட அருள்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.


முதல் வாசகம்


முதலாம் வாசகம் தொடக்க நூல் 22:1-2,9-13,15-18
முதல் வாசக முன்னுரை:
கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார். தொடக்க நூலிலிருந்து வாசிக்க கேட்போம்.


முதலாம் வாசகம் தொடக்க நூல் 22:1-2,9-13,15-18

அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்'' என்றார்.
ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று `ஆபிரகாம்! ஆபிரகாம்' என்று கூப்பிட, அவர் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார்.
ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, ``ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப்போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்'' என்றார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திபா 116:10-15 19

பல்லவி: 'உயிர் வாழ்வோர்; நாட்டில் நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்'

10 'மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். பல்லவி
11 'எந்த மனிதரையும் நம்பலாகாது' என்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன். பல்லவி
12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? பல்லவி

13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

14 இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி

15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. பல்லவி

19 உமது இல்லத்தில் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். அல்லேலூயா!



இரண்டாம் வாசகம்


இரண்டாம் வாசகம் உரோமை 8:31-34
இன்று நாமும் மாறவேண்டியவர்களாய் இருக்கின்றோம். நம்முடைய போலி வாழ்விலிருந்து, மாயை உலகினின்று, சுயநல போக்கிலிருந்து, சாதி, மத, மொழி வெறியிலிருந்து, நான் என்ற அகந்தையிலிருந்து இன்று கண்டிப்பாக மாறவேண்டும். இந்த மாற்றத்திற்குத் தேவை இறை ஆற்றல், இறைவார்த்தை, என்று புனித பவுலடியார் கூறுவதை வாசிக்க கேட்போம்.


புனித சின்னப்பர் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (உரோமை 8:31-34)

இதற்குமேல் நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


நற்செய்தி மாற்கு 9:2-10
அல்லேலூயா, அல்லேலூயா! 'உயிர் வாழ்வோர்; நாட்டில் நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்' அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (மாற்கு 9:2-10)

ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, 'ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், 'மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, 'இறந்து உயிர்த்தெழுதல் ' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அனைவரும் என்னைப் போல் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள்,கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்

அன்புத் தந்தையே இறைவா! நீர் எமக்குக் கொடுத்துள்ள் ஆற்றல்கள், திறமைகள், செல்வங்கள் அனைத்திற்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். இவைகளை நாம் சரியான விதத்திலே பகிர்ந்து வாழவும்;, தன்னலமற்ற விதத்திலே அவற்றை திருச்சபையின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவும் வேண்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும்,வறுமையினாலும் பாதிக்கப்பட்டு துன்புறுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அருள்வாழ்வை அள்ளி வழங்கும் இறைவா! இன்றைய நாளில் இறைவார்த்தை யூடாக எமக்கு நீர் தந்திருக்கும் உமது செய்தியையும், விருப்பத்தையும் , சித்தத் தையும், வழிகாட்டுதல்களையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு, உமது வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, தீமைகளை விட்டுவிட்டு மனமாற்றமடை ந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் எனகே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா, எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாக்கின்றவரும், எம் உயிரை என்றும் காத்திடுகின்றவரும், நாம் போகும் போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் எம்மைக் காத்தருள்பவருமான தந்தையே! அவதியுற்று அல்லலுறும் எம் தமிழ் மக்கள்மீது மனமிரங்கி நாங்கள் ஏங்கித் தவிக்கின்ற முழுமையான விடுதலை வாழ்வை எங்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உயர்களுக்கு உயிர் கொடுக்கம் அன்புத் தந்தையே! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, நோய் இவற்றிலிருந்து மனிதர்கள் விடுதலைபெற்று உயர்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குடிப்பழக்கம், போதைப்பொருள் நுகர்வு, சிற்றின்ப நாட்டங்கள் இவை மனித மாண்பைச் சிதைக்கின்றன என்பதை உணர்ந்து இளைஞர்கள் நற்செய்தியின் வழி வாழ்ந்து மாண்புற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் பிறப்பிடமே எம் இறைவா! எங்கள் நாட்டு அரசியல் சமுதாய தலைவர்கள் அனைவரும் மக்களை நல்வழியில் அக்கறையுடன் சுயநலமில்லாமல் செயல் திட்டங்கள் தீட்ட அதனை செயல்படுத்த அருளைதர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.