ஞாயிறு திருப்பலி - தவக்காலத்தின் 3வது ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 11-03-2012


மனிதர் என்னும் கோவிலில் நீர் உறைகிறீர்

''இயேசு கயிறுகளால் சாட்டை பின்னி, 
அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார் />


திருப்பலி முன்னுரை


ஆண்டவர் இயேசுவின் அன்புள்ள சகோதரர்களே, சகோதரிகளே!

வாருங்கள்: ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்: புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்:

இறைவனின் இரக்கமிகு அன்பை வெளிப்படுத்தும் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டிற்கு உங்களை அன்போடு ஆசீர் பெற அழைக்கின்றேன்.

''இயேசு கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்'' (யோவான் 2:14-15)

இன்று இயேசு எருசலேம் தேவாலயத்தைத் தூய்மைப்படுத்திய நிகழ்வை நற்செய்தியாக வாசிக்கிறோம். அந்த நிகழ்வின் இறுதியில் நற்செய்தியாளரின் விளக்கவுரையில் இயேசு தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார் என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். இன்றைய சிந்தனைக்கு அந்த வரியையே எடுத்துக்கொள்ளலாம். கோவில் என்பது இறைவன் வாழும் இல்லம். மனிதர் கட்டிய கோவிலில் வாழ்கின்ற இறைவன், தாமே கட்டிய கோவிலாகிய மானிட உடல்களிலும் வாழ்கிறார். இயேசுவின் உடல் இறைவனின் திருக்கோவில் என்பதால், அவரைத் தலையாகக் கொண்ட உடலாகிய நம் அனைவரின் உடல்களும் இறைவனின் கோவில்கள்தானே. பவுலடியாரும் நாம் தூய ஆவியின் கோவில்கள் என்று குறிப்பிடுகிறாரே. எனவே, நம்மை, நம் உடல்களை இறைவனின் கோவில்கள் என்ற மதிப்பீட்டில் வளர்வோம். நம்மைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொருவருமே இறைவன் வாழும் கோவில்கள் என்பதையும் மறக்காமல், ஒவ்வொருவருக்கும் உரிய மாண்பை, மதிப்பை வழங்க முன் வருவோம். உடலுக்கெதிரான தீமைகள், குற்றங்கள் குறிப்பாக வன்முறை இறைவனுக்கெதிரானது என்பதை மனதில் கொள்வோம். அடிப்பது என்பது மனித உரிமை மீறல், இறைவனின் கோவிலுக்கு எதிரான பாவம் என்பதை உணர்ந்தால், ஆசிரியர்-மாணவர், கணவன்-மனைவி, பணித்தலைவர்-ஊழியர், மற்றும் அண்டை அயலாருக்கிடையே உள்ள உறவில் வன்முறை, அடித்தல், காயப்படுத்துதல் போன்றவை நிச்சயமாக நீங்கிவிடும்.

எங்களை உமது கோவிலாகப் படைத்து, எங்களிலே வாழ்வதில் மகிழும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களின் உடலும், பிறரது உடல்களும் மாண்புக்குரியவை, மதிப்புக்குரியவை என்பதை உணரவும், அந்தக் கோவில்களை வன்முறைக்குட்படுத்தாமல் வாழவும் எங்களுக்கு அருள்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம்


முதலாம் வாசகம் விடுதலைப் பயணம் 20:1-17
முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியோரே, இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகளை மோசே மக்களுக்கு வழங்குவதைக் காண்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை அன்பு செய்யவும், தன்னைப் போன்று பிறரை அன்பு செய்து வாழவும் நாம் அழைக்கப்படுகிறோம். நேர்மையான உள்ளத்துடன் கடவுளின் கட்டளைகளுக்கு பணிந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.


முதலாம் வாசகம் விடுதலைப் பயணம் 20:1-17

கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திபா 19:7-10

பல்லவி: 'ஆண்டவரே! நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன"

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி
8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி
9 ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி
10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. பல்லவி


இரண்டாம் வாசகம்


முன்னுரை: அன்புக்குரியோரே, இன்றைய இரண்டாம் வாசகத்தில், சிலுவை மறைபொருளின் வழியாக வெளிப்பட்ட கடவுளின் ஞானத்தையும் வல்லமையையும் பற்றி திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். நமது ஞானத்தையும் வல்லமையையும் விட, கடவுளின் மடமையும் வலுவின்மையும் மேலானவை என்பதை உணர்ந்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் 1 கொரி. 1:22-25

யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்: கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது: மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


நற்செய்தி யோவான் 2:13-25
அல்லேலூயா, அல்லேலூயா! 'ஆண்டவரே! நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன" அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




நற்செய்திக்கு முன் வசனம்
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். யோவா 3: 16

புனித. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (யோவான் 2:13-25)

யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்: கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்: அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்: ஆடு மாடுகளையும் விரட்டினார்: நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்: என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள். 'உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, 'இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், 'இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் ; என்றார். அப்போது யூதர்கள், 'இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர். பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை: ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அனைவரும் என்னைப் போல் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கிறிஸ்தவ மக்களாகிய நாம் அனைவரும் இத்தவக்காலத்தில், ஆண்டவரே உமது வார்த்தைக்கு ஆர்வமுடன் செவிமடுக்கவும், அவ்வார்த்தைகளை எமது குடும்பங்களில் ஆர்வமுடன் ஆழ்ந்து படிக்கவும், சிந்திக்கவும் தியானிக்கவும், அவ்வார்த்தையின்படி வாழ்ந்து ஆன்ம வளம் பெறும்படியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்டு துன்புறுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பாவிகளும், இப்புலம்பெயர் மண்ணில் ஆன்ம வாழ்வில் அக்கறையற்றவர்களாக உள்ளவர்களும் பாவப்பரிகாரத்திற்குரிய இத்தவக் காலத்தில் ஒறுத்தல் புரிந்து அதனால் வரும் பலனை வறியோருடன் தாராளமாகப் பகிர்ந்து, உம்மிடம் திரும்பி வந்து சேரும்படியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

பாவத்தை வெறுத்து புண்ணிய வாழ்வைப்பற்றி சிந்திக்கும் இத்தவக்காலத்தில், புனிதம் நிறைந்த வாழ்வுக்கு எம்மை இட்டுச் செல்லக்கூடிய வழிகளை கண்டுபிடித்து, பாவச் சார்பினை எம்மிடமிருந்து அகற்ற வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

உயிர்களுக்கு உயிர் கொடுக்கும் அன்புத் தந்தையே! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.