ஞாயிறு திருப்பலி - தவக்காலத்தின் 4வது ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 18-03-2012


உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்

பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். 
அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர் />


திருப்பலி முன்னுரை


அன்புமிக்க சகோதர சகோதரிகளே!

இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்:
தமது அளவு கடந்த அன்பால் நம்மை மீட்கத் திருவுளம் கொண்ட ஆண்டவரின் பெயரால்
தவக்காலத்தின் 4 வது ஞாயிறு வழிபாட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.

''உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்'' (யோவான் 3:17)

யோவான் நற்செய்தியில் கடவுள் உலகத்தின்மீது கொண்டுள்ள அன்பு அழகாக விளக்கப்படுகிறது. இந்த உலகத்தைப் படைத்து, அதில் மரம் செடி கொடிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை உருவாக்கி, இறுதியில் அனைத்தையும் மனிதரின் பொறுப்பில் கொடுத்தார் கடவுள். இவ்வாறு கடவுள் படைத்த உலகம் அழகு வாய்ந்ததாக இருந்தது. இந்த உலகம் கடவுளின் அன்பிலிருந்து பிறந்தது; அவருடைய அன்பில் நிலைகொண்டுள்ளது; அவருடைய அன்பினால் மீட்புப் பெற்றது. எனவே, உலகத்தின் மீது கடவுள் கொண்டுள்ள அன்பு எந்நாளும் தொடர்கின்ற ஒன்று. அதே நேரத்தில் உலகத்தில் தீமை இருப்பதையும் யோவான் நற்செய்தி கோடிட்டுக் காட்டுகிறது. கடவுளால் அனுப்பப்பட்ட அவர்தம் திருமகன் இயேசுவை ஏற்க மறுத்தவர்கள் ஒளியைக் கண்டும் இருளை விரும்பியவர்களுக்கு ஒப்பாவார்கள். இவர்கள் இயேசுவை ஏற்க மறுத்தார்கள்.

''பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்'' (யோவான் 3:14)

சிலுவையின் முன் அடையாளமாக பழைய ஏற்பாட்டில் நாம் காண்பது வெண்கலத்தால் ஆன பாம்பின் சிலை. சிலை வழிபாடு என்னும் பாவத்தின் காரணமாக கொள்ளிவாய்ப் பாம்புகளை கடவுள் அனுப்பி, பலரும் கடியுண்டு இறந்தபோது, மோசே அவர்களுக்காகப் பரிந்து பேசி மன்றாடியபோது, கடவுளே மோசேயிடம்;, கொள்ளிவாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து, கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான் என்று கூறுகிறார். அவ்வாறே மோசேயும் வெண்கலப் பாம்பு ஒன்றைச் செய்து வைக்க, அதைப் பார்த்த அனைவரும் பிழைத்துக்கொண்ட செய்தியை நாம் எண்ணிக்கை நூலில் வாசிக்கிறோம். இந்த நிகழ்ச்சியையே ஆண்டவர் இயேசுவும் மேற்கோள் காட்டி, அந்த வெண்கலப் பாம்பை தனது சிலுவைச் சாவின் முன் அடையாளமாக யோவான் நற்செய்தியில் எடுத்துக்காட்டுகிறார். பாம்பால் இறந்தவர்களைப் பாம்பினாலே உயிர்பெற்றெழச் செய்த இறைவன், மரத்தால் வந்த சாபத்தை ஒரு மரத்தாலேயே நீக்கினார். இன்று அந்தச் சிலுவை மரத்தை வணங்குகிறோம். அந்தச் சிலுவைக்கு மகிமையைத் தந்த இயேசுவைப் போற்றுவோம். அந்த மகிமைக்குக் காரணமான அவரது கீழ்ப்படிதலைப் பின்பற்றுவோம்.

உமது கீழ்ப்படிதலால் சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்ட இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது சிலுவையால் எங்களை மீட்டுக்கொண்டதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் வாழ்வின் சிலுவைகளை உற்றுப்பார்த்து, அவற்றில் இறைத்திருவுளத்திற்குப் பணிந்து வாழவும், நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளும் வரம் வேண்டி, தூய ஆவியின் கொடைகளால் எங்களை நிரப்பவும் இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசகம்


முதல் வாசக முன்னுரை: (2குறிப்பேடு 36:14-16,19-23)
இனியவர்களே,
இன்றைய முதல் வாசகம் எருசலேம் கோவில் அழிக்கப்பட்டதையும், பாரசீக அரசர் சைரசு அக்கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப ஆணை பிறப்பித்ததையும் எடுத்துரைக்கிறது. கடவுள் அனுப்பிய இறைவாக்கினர்களையும், அவர்களின் வார்த்தைகளையும் புறக்கணித்ததால், கடவுளின் சினம் யூதர்களை தண்டித்ததையும், அவரது இரக்கத்தினால் அவர்கள் மீண்டும் புதுவாழ்வு பெற்றதையும் இங்கு காண்கிறோம். கடவுளின் வார்த்தைகளை உள்ளத்தில் ஏற்று வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.


2ம் குறிப்பேட்டிலிருந்து முதலாம் வாசகம் (36:14-16,19-23)

அதுபோல், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது. கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்: அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர். மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான்: பாரசீக அரசு எழும்பும்வரை அங்கே, அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர். 'நாடு ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும் ' என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின. பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின்முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே அவன் தனது நாடு முழுவதற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில்: 'பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! '

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 81:5-10-13-16

பல்லவி: 'உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!"

1 பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். பல்லவி
2 அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். பல்லவி
3 ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். 'சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர். பல்லவி
4 ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம்; பாடுவோம்? பல்லவி
5 எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! பல்லவி
5 எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! பல்லவி
6 உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!


இரண்டாம் வாசகம்


முன்னுரை:
இனியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு கிறிஸ்து வழியாக நாம் பெற்றுள்ள மீட்பைப் பற்றி பேசுகிறது. கடவுளின் இரக்கத்தாலும் அன்பாலும் மீட்கப்பட்ட நாம், கிறிஸ்துவின் அருளைக் கொடையாகப் பெற்றிருக்கிறோம் என்று திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். இறையருளில் நாம் நிலைத்து வாழ, கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் உருக்கமாக வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.


எபேசியர் எழுதிய திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (எபேசியர் 2:4-10)

ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல: மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச் செயல்காளல் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு: நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


நற்செய்தி யோவான் 2:13-25
அல்லேலூயா, அல்லேலூயா!'உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!" அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




நற்செய்திக்கு முன் வசனம்
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்".

புனித. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (யோவான் 3:14-21)

பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை: ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்கள் மன்றாட்டுகள்


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நிலைவாழ்வு தருபவராம் இறைவா,
உம்மில் நம்பிக்கை கொண்டு, உமது திருமகனின் அரசை உலகெங்கும் நிறுவ உழைத்து வருகின்ற திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலை யினர் அனைவருக்கும் நிலைவாழ்வைப் பரிசளிக்க வேண்டுமென்று உம்மைப் பணிந்து மன்றாடுகிறோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,
உலக நாடுகளில் நிலவும் அநீதியான சட்டங்களும் அடக்குமுறைகளும் மறையவும், உமது கட்டளைகளுக்கு ஏற்ப உலகில் இறையன்பும் பிறரன்பும் செழிக்கவும் மக்களிடம் நல்லதோர் மனமாற்றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வல்லமை மிகுந்தவராம் இறைவா,
இயற்கைச் சீற்றங்களாலும், உடல்நல பாதிப்புகளாலும், மன வேதனைகளாலும், மற்ற வாழ்க்கைப் போராட்டங்களாலும் பாதிக்கப்பட்டுத் துன்புறும் அனைவருக்கும் புதுவாழ்வு வழங்க வேண்டுமென்று பணிவன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,
இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை அருள்பவராம் இறைவா,
பாவத்தை வெறுத்து புண்ணிய வாழ்வைப்பற்றி சிந்திக்கும் இத்தவக்காலத்தில், புனிதம் நிறைந்த வாழ்வுக்கு எம்மை இட்டுச் செல்லக்கூடிய வழிகளை கண்டுபிடித்து, பாவச் சார்பினை எம்மிடமிருந்து அகற்ற வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

போராட அழைப்பவராம் இறைவா,
உமது கட்டளைகளுக்கு பணிந்து, இயேசுவைப் போன்று அநீதிகளுக்கு எதிராக போராடுபவர்களாக வாழ, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரை யும் நிறைவாக ஆசீர்வதித்து, வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.