ஞாயிறு திருப்பலி - தவக்காலத்தின் 5வது ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 25-03-2012


'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'

எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். />


திருப்பலி முன்னுரை


அன்புமிக்க சகோதர சகோதரிகளே!

என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று நாம், தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு தினத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்க ஒன்று கூடியுள்ளோம்.

இயேசுவில் நம்பிக்கை கொண்ட மக்கள் யூதர்கள் மட்டுமல்ல, பிற இனத்தாரும் அவரை ஏற்றனர் என்னும் உண்மையை இங்கே யோவான் நற்செய்தி தெரிவிக்கிறது. ''இயேசுவைக் காண விரும்பி'' வருகின்ற மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது உள்ளத்தில் எழுகின்ற தாகத்தைத் தணிக்க வேண்டும் என்றால் அவர்களை வாழ்வின் ஊற்றாகிய இயேசுவிடம் நாம் இட்டுச் செல்ல வேண்டும். இயேசுவே நமக்கு வாழ்வளிக்கின்றார். மண்ணில் விழுந்து மடிகின்ற கோதுமை மிகுந்த விளைச்சலைத் தருவதுபோல, சிலுவையில் இறக்கின்ற இயேசு நமக்கு நிலைவாழ்வு அளிக்கிறார். அவரை நாம் அணுகிச் சென்று வாழ்வு பெறுவதோடு பிறரையும் அவரிம் கூட்டிச் செல்லவும், நற்செய்தியின் தூதுவர்களாக எங்களை மாற்றவும் தொடரும் திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்




எரேமியா நூலிலிருந்து முதலாம் வாசகம் (எரேமியா 31:31-34)

இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர். அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்: அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் 'ஆண்டவரை அறிந்துகொள்ளும் ' எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்: அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூறமாட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 51:1-2 10-13

பல்லவி: 'கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். பல்லவி
என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; பல்லவி
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். பல்லவி
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். பல்லவி
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி


இரண்டாம் வாசகம்




எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (எபிரேயர் 5:7-9)

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, 'தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


நற்செய்தி யோவான் 12:20- 33
அல்லேலூயா, அல்லேலூயா!'கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;" அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




நற்செய்திக்கு முன் வசனம்
''கிரேக்கர் சிலர்... பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று கேட்டுக்கொண்டார்கள்'' (யோவான் 12:20-21)

வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் ' என்று கேட்டுக் கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்: அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, 'மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் ' என்றார். மேலும் இயேசு, 'இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? 'தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும் ' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், 'மாட்சிப்படுத்தினேன்: மீண்டும் மாட்சிப்படுத்துவேன் ' என்று ஒலித்தது. அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள்' அதைக் கேட்டு, 'அது இடிமுழக்கம் ' என்றனர். வேறு சிலர், 'அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு ' என்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, 'இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது: இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் ' என்றார். தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்கள் மன்றாட்டுகள்


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நிலைவாழ்வு தருபவராம் இறைவா,
உம்மில் நம்பிக்கை கொண்டு, உமது திருமகனின் அரசை உலகெங்கும் நிறுவ உழைத்து வருகின்ற திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலை யினர் அனைவருக்கும் நிலைவாழ்வைப் பரிசளிக்க வேண்டுமென்று உம்மைப் பணிந்து மன்றாடுகிறோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,
இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வல்லமை மிகுந்தவராம் இறைவா,
இயற்கைச் சீற்றங்களாலும், உடல்நல பாதிப்புகளாலும், மன வேதனைகளாலும், மற்ற வாழ்க்கைப் போராட்டங்களாலும் பாதிக்கப்பட்டுத் துன்புறும் அனைவருக்கும் புதுவாழ்வு வழங்க வேண்டுமென்று பணிவன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,
இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை அருள்பவராம் இறைவா,
பாவத்தை வெறுத்து புண்ணிய வாழ்வைப்பற்றி சிந்திக்கும் இத்தவக்காலத்தில், புனிதம் நிறைந்த வாழ்வுக்கு எம்மை இட்டுச் செல்லக்கூடிய வழிகளை கண்டுபிடித்து, பாவச் சார்பினை எம்மிடமிருந்து அகற்ற வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

போராட அழைப்பவராம் இறைவா,
உமது கட்டளைகளுக்கு பணிந்து, இயேசுவைப் போன்று அநீதிகளுக்கு எதிராக போராடுபவர்களாக வாழ, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரை யும் நிறைவாக ஆசீர்வதித்து, வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.