பாஸ்கா ஞாயிறு- ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

இரண்டாம் ஆண்டு 08-04-2012


பாவத்தின் மீதும், மரணத்தின் மீதும் அவர் அடைந்த உயிர்ப்பின் வெற்றி உலகம் அனைத்திற்கும் இறுதியான வெற்றி.

மகதலா மரியா சீடரிடம் சென்று, நான் ஆண்டவரைக் கண்டேன் என்றாள் />


திருப்பலி முன்னுரை


கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே! சிறார்களே, இளைய உள்ளங்களே, சகோதர சகோதரியரே!

நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று உயிர்ப்பு ஞாயிறு. பொய்மையும், அநீதியும் நம் வாழ்வின் இடையே தடைகளாகக் குறுக்கிட்டாலும் இறுதியில் அவை ஒன்றுமில்லாமல் வீழ்ந்து போகும் என்பது நம் ஆண்டவராம் இயேசுவின் உயிர்ப்பு சொல்கின்ற பாடம். யோவான் நற்செய்திப்படி, மகதலா மரியா இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு வாரத்தின் முதல்நாள் விடியற்காலையே வந்து, உயிர்த்தெழுந்த இயேசுவைச் சந்தித்தார். புத்துயிர் பெற்று எழுந்த இயேசுவைச் சந்தித்த முதல் சீடர் மகதலா மரியா. ஆனால் அவர் இயேசுவை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இயேசு அவரைப் பார்த்து, "மரியா" என்று பெயர்சொல்லிக் கூப்பிட்ட வேளையில்தான் மரியா தம் முன்னிலையில் நின்றவர் இயேசுவே என அடையாளம் கண்டார். உடனே இயேசுவை நோக்கிப் "போதகரே" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கிறார். அதன்பின்னர் இயேசு மரியாவுக்கு ஒரு சிறப்புப் பணி கொடுக்கிறார். அதாவது மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவின் சீடர்களைச் சந்தித்து, இயேசு உயிர்பெற்றெழுந்துவிட்டார் என்னும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். மரியாவும் சீடர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார். உயிர்பெற்றெழுந்த இயேசு நம்மோடு உயிர்வாழ்கின்றார். அவரை நாம் அடையாளம் காண வேண்டும் என்றால் நாமும் ஒரு நம்பிக்கைப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இயேசுவை நாமும் சந்திக்க வேண்டும். இயேசு நம்மைப் பெயர்சொல்லி அழைப்பதை நாம் கேட்க வேண்டும். நாம் பெற்ற அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொண்டு அவர்களையும் இயேசுவில் நம்பிக்கை கொள்ள, இயேசுவை நாங்கள் ஆண்டவராக ஏற்று அவருக்குச் சான்று பகர, புதிய பாஸ்காவின் புனித செம்மறியாம் இயேசுக் கிறிஸ்துவுடன் இணைந்து உயிர்ப்பின் ஒளியில் வாழ்ந்திட பெருமகிழ்ச்சியுடன் இத் திருப்பலில் பங்கு பெறுவோம்.

முதல் வாசகம்




திருத்தூதர் பணியிலிருந்து முதலாம் வாசகம் (தி ப.10:34,37-43)

அந்நாள்களில் பேதரு பேசத் தொடங்கி, 'கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள்.ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்கு மல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர் ' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 118: 1-2 16-17 22-23

பல்லவி: 'அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

பல்லவி
'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. பல்லவி
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்; பல்லவி
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! பல்லவி
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி


இரண்டாம் வாசகம்




தூயபவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (கொலோ 3:1-4)

சகோதர சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.இவ்வுலகு சாhந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

அல்லது தூயபவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (கொரி.5:6-8)

சகோதர சகோதரிகளே, சிறிதளவு புளிப்புமாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்து விடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


நற்செய்தி 1யோவான் 20:1-9
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




நற்செய்திக்கு முன் வசனம்
''ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! '

வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்: கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ''ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்: ஆனால் உள்ளே நுழையவில்லை.அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்: நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்கள் மன்றாட்டுகள்


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

வாழ்வின் ஊற்றாகிய இறைவா,
உம் திருமகன் இயேசுவின் உயிர்ப்பு விழாவை பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இவ்வேளையில் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கவும் திருச்சபையின் விசுவாச வாழ்வில் புத்துயிர் அளிக்கும் சாட்சியங்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

போராட அழைப்பவராம் இறைவா,
உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,
இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வல்லமை மிகுந்தவராம் இறைவா,
இயற்கைச் சீற்றங்களாலும், உடல்நல பாதிப்புகளாலும், மன வேதனைகளாலும், மற்ற வாழ்க்கைப் போராட்டங்களாலும் பாதிக்கப்பட்டுத் துன்புறும் அனைவருக்கும் புதுவாழ்வு வழங்க வேண்டுமென்று பணிவன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,
இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை அருள்பவராம் இறைவா,
எங்கள் சமுதாய வாழ்வில் காணும் அநீதிகளை நாங்கள் எதிர்த்துப் போராடவும் எங்கும் நீதியும், சகோதர அன்பும் தழைத்தோங்க உழைக்கவும் மன உறுதியும், அருள் துணையும் தர வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



-->