உயிர்ப்புக் காலம் மூன்றாம் ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 22-04-2012


"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!"

 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள். நானே தான்.

/>


திருப்பலி முன்னுரை


கிறிஸ்துவில் உண்மைக்குரியவர்களே,

உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

இன்றைய திருவழிபாடு இயேசுவின் உயிர்ப்பின் அனுபவத்தை முழுமையாக உணரவும், ஆண்டவரின் உயிர்ப்புக்கு உண்மையான சாட்சிகளாக வாழவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இயேசுவைக் கண்ட பிறகும் சீடர்கள் அவரை அடையாளம் காண நேரம் பிடித்தது. நம் வாழ்விலும் சில வேளைகளில் நாம் இயேசுவின் பிரசன்னத்தைக் கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம். ஏதோ ஓர் ஆவிபோலத் தான் அவர் நம்மிடையே உலவுவதாகக் கூட நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவன்று. இயேசு தம் சீடர்களோடு உலகம் முடியும் வரை இருப்பதாக வாக்களித்திருக்கிறார். ''இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என இயேசு கூறிய வாக்குறுதி நமக்கு மன உறுதி தரவேண்டும்.

நம்மோடு வாழ்கின்ற இயேசு நமக்குக் கடவுளின் அமைதியை அளிக்கின்றார். அப்பம் பிட்கின்ற வேளையிலும் அதைப் பகிர்ந்துகொள்கின்ற தருணத்திலும் அவருடைய உடனிருப்பு சிறப்பான விதத்தில் துலங்குகிறது. நாமும் ஒருவருக்கொருவர் அமைதி வழங்குவோராக, ஒருவரோடொருவர் அப்பம் பகிர்வோராக வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.

உண்மையை ஏற்க மனதின்றி நாம் கலக்கம் அடையும் வேளையில், கடவுள் நமக்கு தெளிவை வழங்குகிறார். திருச்சட்டமும் இறைவாக்கினரும் முன்னறிவித்த மெசியா இயேசுவே என்பதை உணர்ந்து, அவரது சாட்சிகளாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்



திருத்தூதர் பணியிலிருந்து முதலாம் வாசகம் (தி ப 3: 13-15,17-19)

அந்நாள்களில் பேதுரு மக்களை நோக்கிக் கூறியது: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர். இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்'துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள்.வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.அன்பர்களே, நீ'ங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத்தெரியும்.ஆனால் கடவுள், தம் மெசியா துன்புறவேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார்.எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 4: 1-6 8

பல்லவி: உமது முகத்தின் ஒளி எங்கள்மீது வீசச் செய்யும் ஆண்டவரே!.

பல்லவி
எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்; பல்லவி
மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா) பல்லவி
ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்; -இதை அறிந்துகொள்ளுங்கள். பல்லவி
சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். (சேலா) பல்லவி
முறையான பலிகளைச் செலுத்துங்கள்; ஆண்டவரை நம்புங்கள். பல்லவி
'நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?" எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். பல்லவி
இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். பல்லவி


இரண்டாம் வாசகம்




யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (1யோவான் 2:1-5)

என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்: ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே: நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே. அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும். 'அவரை எனக்குத் தெரியும் ' எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்: உண்மை அவர்களிடம் இராது. ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது: நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


உமது முகத்தின் ஒளி எங்கள்மீது வீசச் செய்யும் ஆண்டவரே!




நற்செய்தி வாசகம்




நற்செய்திக்கு முன் வசனம்

''சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவே நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்னு அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்''

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: (லூக்கா 24:35-48)

அக்காலத்தில் சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், 'நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்: எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே: இவை ஆவிக்குக் கிடையாதே ' என்று அவர்களிடம் கூறினார்: இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், 'உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? ' என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். பின்பு அவர் அவர்களைப் பார்த்து, 'மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே ' என்றார்: அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், 'மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், 'பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

வாழ்வின் ஊற்றாகிய இறைவா,
இயேசுவின் உயிர்ப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டு, உமது சாட்சிகளாக வாழ்ந்து வருகின்ற திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உமது இரக்கத்தால் புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வின் நாயகனே இறைவா!
நீர் சாவினை வென்று, பாவத்தை அழித்து, இருளை அகற்றி வெற்றி வீரராய் உயிர்த்தது போல, நாங்களும் எங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற சோதனைகளில் வெற்றி பெற்று உயிர்ப்பின் மக்களாய் வாழ, உம் வழியில் வெற்றி நடை போடத் தேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

போராட அழைப்பவராம் இறைவா,
உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,
இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மேன்மைமிகு அரசராம் இறைவா,
உலகெங்கும் வாழும் பிற சமயத்தினர் முன்னிலையில் உண்மையின் சாட்சிகளாக வாழ்ந்து, உமது அரசைக் கட்டியெழுப்ப கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் உதவ வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,
இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புசெய்ய அழைப்பவராம் இறைவா,
பயங்கரவாதம், வன்முறை, கலவரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் துன்புறும் மக்களிடையே, உமது அன்பின் சாட்சிகளாக வாழும் வரத்தினை கிறிஸ்தவர்கள் அனை வருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.



-->