உயிர்ப்புக் காலம் ஐந்தாம் ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 06-05-2012


இணைந்திருந்தால்.. .. நிலைத்திருந்தால் .. .. கேட்பதெல்லாம் நடக்கும்.

இயேசு, 'நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே 
என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது' என்றார்''

/>


திருப்பலி முன்னுரை


இறைவனில் இனியவர்களே,

திராட்சைச் செடியாம் இயேசுவின் பெயரால், உயிர்ப்புக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

நமது வாழ்வு இறைவனோடு இணைந்ததாக இருக்க வேண்டுமென்று இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. இயேசு தம்மைத் ''திராட்சைச் செடி'' என்றும் தம்மில் நம்பிக்கை கொள்வோரைத் ''திராட்சைக் கொடி'' என்றும் உருவகித்துக் கூறுகிறார். இயேசுவோடு இணைந்திருப்பதன் நெருக்கம் பல பலன்களைக் கொடுக்கவல்லது. இயேசுவை விட்டுக் கொஞ்சம் விலகினாலும் அந்த இழப்பு, கொஞ்சம் அல்ல. மிக மிகப் பெரிது. "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது" கொஞ்சம்தானே இயேசுவை விட்டு விலகியிருக்கறேன். ஆகவே கொஞ்சம்தானே நஷ்டம் என்ற கணக்கு, ஆன்மீகத்தில் தப்புக்கணக்கு. இயேசுவை விட்டு கொஞ்சம் விலகினாலே நாம் எல்லாவற்றையும் நஷ்டமடைந்துவிடுவோம். அதே வேளையில், நாம் இயேசுவோடு இருந்தால், "விரும்பிக் கேட்டதெல்லாம் கிடைக்கும்". இயேசுவோடு நெருக்கமாக இருந்துகொள்ளுங்கள். செடியும் கிளையுமாக, கிளையும் கொடியுமாக. இணை பிரியாத இந்த நெருக்கம் மிகுந்த பலனைத் தரும். கனி கொடுக்கும். திராட்சைச் செடியாகிய இயேசுவோடு இணைந்த கொடிகளாக இருந்து, பலன் தருமாறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இறைவனின் அழைப்பை உணர்ந்தவர்களாய், இறையன்பில் நிலைத்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்



திருத்தூதர் பணியிலிருந்து முதலாம் வாசகம்: (தி ப 9:26-31)

அந்நாள்களில் சவுல் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டதுபற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியதுபற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார். அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசிவந்தார். கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள். ஆனால் அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச்சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள். யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 22:25-27- 29-31

பல்லவி: ஆண்டவரே! நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!!

பல்லவி
25 மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக! உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! பல்லவி
27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். 29 மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். பல்லவி
30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும். 31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு "இதை அவரே செய்தார்" என்பர். பல்லவி


இரண்டாம் வாசகம்



1யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம்: (1யோவான் 3:18-24)

பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்து கொள்வோம்: நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்: அனைத்தையும் அறிபவர். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்: ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்: அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்: கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


ஆண்டவரே! நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

''இயேசு, 'நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது' என்றார்'' (யோவான் 15:8)

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: (யோவான் 15:1-8)

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. நானே திராட்சைக் செடி: நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது."


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நல்ல ஆயனாகிய அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்திருக்கும் நல்ல மேய்ப்பர்களாகிய எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, தீமைகளை முறியடிக்க வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

துணையாளராம் இறைவா,

உமது அன்பைப் புறக்கணித்து, தங்கள் மன விருப்பங்களுக்கு ஏற்ப தன்னலத்தோடு வாழும் மக்கள் அனைவரும், உமது திருமகன் வழியாக உம்மில் நம்பிக்கைகொள்ள துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

போராட அழைப்பவராம் இறைவா,

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,

இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மேன்மைமிகு அரசராம் இறைவா,

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் நாங்கள் உமது வார்த்தைக்கு மட்டுமே என்றும் பணிந்து உமது சாட்சிகளாய் வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வளிப்பவராம் இறைவா,

உலகில் தீய குணங்களாலும், தீயப் பழக்கங்களாலும், நோய்களாலும், மன அமைதியின்றி வாழ்வோர் அனைவருக்கும் உமது அன்பினால் ஆறுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,

இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புசெய்ய அழைப்பவராம் இறைவா,

பயங்கரவாதம், வன்முறை, கலவரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் துன்புறும் மக்களிடையே, உமது அன்பின் சாட்சிகளாக வாழும் வரத்தினை கிறிஸ்தவர்கள் அனை வருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.



-->