உயிர்ப்புக் காலம் ஏழாம் ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 20-05-2012


இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா.

இயேசு சீடர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் 
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்றார் />


திருப்பலி முன்னுரை


இறைவனில் இனியவர்களே,

இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா. எப்பெயருக்கும் மேலாக உயர்த்தப்பட்டு, தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கும் நம் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ள உங்கள் அனைவரையும் உயிர்ப்புக் காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு வரவேற்கிறோம்.

''இயேசு சீடர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்றார் (மாற்கு 16:15)

இயேசு கொணர்ந்த நற்செய்தி என்ன? கடவுள் நம்மை அன்புசெய்கிறார்; நாம் கடவுளின் பிள்ளைகளாக இருப்பதால் கடவுள் காட்டும் வழியில் நடந்து சென்று அவரிடத்தில் நிலையான அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள வேண்டும்; கடவுள் உலகின்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தன் ஒரே மகனை (இயேசுவை) நமக்கு மீட்பராக அளித்தார்; அவரிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும். - இதுவே இயேசு கொணர்ந்த நற்செய்தியின் சுருக்கம். இச்செய்தியை இயேசு ஒருசில மனிதர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படவேண்டிய இரகசியமாகக் கருதவில்லை. மாறாக, உலகில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இந்நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இயேசுவின் பார்வை. ஆகவே, அவர் தம் சீடர்களுக்கு ஒரு முக்கிய கட்டளை தருகிறார்: ''உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்பதே இக்கட்டளை. இயேசுவின் சீடர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி ''நற்செய்தி அறிவித்தல்'' ஆகும். இது வெறும் வார்த்தைகளால் நடைபெறுகின்ற நிகழ்வு அல்ல. மாறாக, நற்செய்தி என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசுவின் போதனையை உள்ளத்தில் ஏற்று, அதை வாழ்வில் கடைப்பிடிப்பதே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம். ஆகவே நாம் அனைவரும் இயேசுவின் அருட்பிரசன்னத்திலும், அவருடைய உடனிருப்பிலும், அவருடைய வார்த்தையிலும், வாக்குறுதிகளிலும் நம்பிக்கை கொண்டு வாழுவோம். அத்தோடு நம் வாழ்வாலும், பணியாலும் இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றுவோம். இறையாசீர் பெற்றுப் புதுவாழ்வு வாழ...............

தொடரும் பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்



திருத்தூதர் பணகள் நூலிலிருந்து வாசகம். 1:1-11

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்ற மடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்: பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்;ந்து உண்ணும்போது அவர்களிடம், ;நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள் என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், ;ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? ;என்று கேட்டார்கள். அதற்கு அவர், என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்;ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களு க்கு உரியது அல்ல: ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்;ல மையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் ; என்றார். இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக் கொள்ளப் பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்து வி;ட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்ற மடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் ; என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திபா: 47:1-2, 5-8

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்!.!

பல்லவி
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்: ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்: உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே: பல்லவி

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்: கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்: பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்: அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்: அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி



இரண்டாம் வாசகம்



திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இரண்டாம் வாசகம்: (எபேசியர் 1:17-23)

17 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராhக! 18 கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், 19 அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்;துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, 20 கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். 21 அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். 22 அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத்; தலையாகத் தந்தருளினார். 23 திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்: இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ; என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

புனித. மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

15 இயேசு அவர்களை நோக்கிஇ "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்கஇ அவர்கள் குணமடைவர்" என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டுஇ நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நல்ல ஆயனாகிய அன்புத் தந்தையே இறைவா!

தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றை உம் திருமகன் இயேசு அறிவுறுத்தியது போல, சவால்கள் பெருகிவிட்ட இன்றைய இக் காலகட்டத்தில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்கும், சீரிய வழிகாட்டுதல்லளையும், ஞானத்தையும், அறிவுரைகளையும் நீரே வழங்கி, நற்செய்தியைத் தம் வாழ்வாலும், பணியாலும் அறிவிக்கும் ஆற்றலை அவாகளுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

துணையாளராம் இறைவா,

உமது அன்பைப் புறக்கணித்து, தங்கள் மன விருப்பங்களுக்கு ஏற்ப தன்னலத்தோடு வாழும் மக்கள் அனைவரும், உமது திருமகன் வழியாக உம்மில் நம்பிக்கைகொள்ள துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

போராட அழைப்பவராம் இறைவா,

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,

இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மேன்மைமிகு அரசராம் இறைவா,

உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வளிப்பவராம் இறைவா,

அன்புத் தந்தையே இறைவா! எம் இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும், இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கொடுத்தது போன்ற ஆற்றலையும், சக்தியையும் பெற்று தாம் வாழும் சமுதாயத்திற்கு நன்மை செய்கின்றவர்களாகவும், உமது நற்செய்தியின் தூதுவர்களாகவும் செயற்படும் சக்தியை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,

இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புசெய்ய அழைப்பவராம் இறைவா,

பயங்கரவாதம், வன்முறை, கலவரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் துன்புறும் மக்களிடையே, உமது அன்பின் சாட்சிகளாக வாழும் வரத்தினை கிறிஸ்தவர்கள் அனை வருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.



-->