பொதுக்காலம் 17 வது - ஞாயிறு -

இரண்டாம் ஆண்டு 29-07-2012


``பகிர்வு பலன் தரும்''

இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந் தோருக்குக் கொடுத்தார். 
அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது./>


திருப்பலி முன்னுரை


புத்தொளி வீசிட, புதுமணம் கமழ்ந்திட புதிய நாள் பிறந்தது, இறைவனின் அருளை இறைபலியினில் பெறவே புனித நாள் புலர்ந்தது. இறைவனின் திருக்கூட்டமே இன்று நாம் பொதுக்காலம் 17 ம் ஞாயிறை சிறப்பிக்கிறோம்.

இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு, ஐயாயிரம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு உணவளித்த நிகழ்வை இன்றைய திருவழிபாடு நமக்கு முன்வைக்கிறது. இறைவன் நமக்கு மிகுதியாக தருகிறார் என்ற கருத்தையும் நமக்கு முன்வைக்கிறது. மக்கள் மீது பரிவு கொண்டவராய் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்கிறார். நம் மேல் கனிவு காட்டும் இறைவன், நமது வாழ்வில் அற்புதங்களை செய்யவும் தயாராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனின் செயல்பாட்டை நம் வாழ்வில் உணர, நாம் அன்போடும் தாழ்மையோடும் நம்மை அவரிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம். ஆண்டவரின் அருஞ்செயல்களை நமது வாழ்வில் காண வரம் வேண்டி, இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.

முதல் வாசகம்



அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 4: 42-44

அந்நாள்களில் பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, �மக்களுக்கு உண்ணக் கொடு� என்றார். அவருடைய பணியாளன், �இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?� என்றான். அவரோ, �இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் �உண்ட பின்னும் மீதி இருக்கும்� என்று ஆண்டவர் கூறுகிறார்� என்றார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 145: 10-11. 15-16. 17-18 (பல்லவி: 16)

பல்லவி: ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

15 எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். 16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி



இரண்டாம் வாசகம்



திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 7: 16 - அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

அனைவரும் வயிறார உண்டனர்.


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ``இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?'' என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறு மொழியாக, ``இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே'' என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, ``இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?'' என்றார். இயேசு, ``மக்களை அமரச் செய்யுங்கள்'' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந் தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், ``ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்'' என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ``உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

என்றும் வாழும் இறைவா,

உலகெங்கும் விரிந்து பரவி நிற்கும் உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், இறைமக்களை இறையாட்சி நெறியில் உறுதிபடுத்தி வளரச்செய்ய தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மாட்சி மிகு இயேசுவே,

உம்மைப் போற்றுகிறோம். பசியால் வாடிய மக்களின் பசி போக்கி, நிறைவு செய்த நீர் நற்கருணை என்னும் விருந்தால், எங்களின் உடல், உள்ள, ஆன்ம பசியைத் தணிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வளிப்பவராம் இயேசுவே,

உமக்கு நன்றி கூறுகிறோம். ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தீரே. இன்றும் எண்ணிலடங்கா மக்களுக்கு உம்மையே உணவாகத் தருகிறீரே. உம்மைப் போற்றுகிறோம். நற்கருணை விருந்தில் உம்மை இறைவனாக, ஆண்டவராகக் கண்டு ஆராதிக்க அருள்தாரும். போர்ச் சூழல், வறட்சி, இல்லாமை, இயலாமை போன்ற காரணங்களால் உணவின்றி வாடுவோருக்கும், அன்பின்மை, அமைதியின்மை, நலமின்மை போன்ற துன்பங்களால் வருந்துவோருக்கும் புதுவாழ்வு வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

போராட அழைப்பவராம் இறைவா,

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,

இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆறுதல் அளிப்பவராம் இறைவா,

பல்வேறு நோய்களாலும், துன்பங்களாலும் வேதனை அடைந்து வருந்தும் மக்கள் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உமது இரக்கத்தால் தங்கள் வாழ்வில் ஆறுதலை சுவைக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உற்ற துணைவராம் இறைவா,

தொடங்கப்படவுள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நாடுகளிடையே சமாதானத்தையும், ஒற்றுமையையும் மகிழ்வையும் உருவாக்கிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,

இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பு தந்தையே இறைவா,

உமது பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு பிளவுபட்டுக் கிடக்கும் அத்தனை சபைகளும் ஒன்று சேர்ந்து உமது சாட்சிகளாய் மாறும் ஒரு உன்னத நிலையை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



-->