பொதுக்காலம் 19 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 12-08-2012


''முணுமுணுக்க வேண்டாம்''

வாழ்வுதரும் உணவு நானே/>


திருப்பலி முன்னுரை


கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே! இன்றைய ஞாயிறு திருவிருந்து கொண்டாட்டத்திற்கு ஒன்றிணைந்து வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்று அழைக்கின்றேன்.

இன்று பொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு. இன்றைய நற்செய்தி வாசகத்தில் அதிகம் முக்கியத்துவம் பெறாத இந்த செய்தியைப் பற்றி இன்று கொஞ்சம் சிந்திப்போம். தாமே உயிர் தரும் உணவு என்று இயேசு கூறியதால், யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள் என்று வாசிக்கிறோம். இயேசுவும் அவர்களைப் பார்த்து உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம் என்று கூறுகிறார்.

முணுமுணுப்பு என்பது என்ன? ஒரு செய்தியை, ஒரு நபரை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதே வேளையில் அந்த செய்தியை, அந்த நபரைத் தள்ளவும் முடியாது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் சில மனிதர்கள் செய்வதுதான் முணுமுணுப்பு. இவர்களுக்கு உண்மையை உரக்க பேச முடிவதில்லை. காரணம், தாங்கள் உண்மையின் பக்கம் இல்லை என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதே வேளையில், உண்மையை ஏற்றுக்கொள்கிற நேர்மையும், மனத் துணிவும் இவர்களுக்கு இல்லை. எனவே, ஒரே வழி மனம் புழுங்கி முணுமுணுப்பது. இது ஒருவகையான உளவியல் நோய்தான். யூதர்களுக்கு இயேசுவுடன் வாதிட்டு வெல்லவும் முடியவில்லை. அவர் சொல்லும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. எனவே, முணுமுணுத்தனர். நம்முடைய வாழ்விலும் பல நேரங்களில் நம் இல்லத்தில், பணியிடத்தில், பயண நேரங்களில் உண்மையை உரத்தப் பேசவும் முடியாமல், அநீதியைத் துணிவுடன் தட்டிக்கேட்கவும் இயலாமல் நாம் செய்வதெல்லாம் மெல்ல முணுமுணுப்பதுதான். இன்று இயேசு நம்மிடம் சொல்கிறார்; முணுமுணுக்க வேண்டாம். இறையருள்கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்


முதலாம் வாசகம் 1 அர. 19:4-8

அவர் பாலை நிலத்தில் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டுமெனப் பின்வருமாறு மன்றாடினார்: "ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்: என் உயிரை எடுத்துக் கொள்ளும்: நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல: "பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார். அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, "எழுந்து சாப்பிடு" என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக் கொண்டார்.ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, "எழுந்து சாப்பிடு: ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும் " என்றார்.அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 34:1-8

பல்லவி: “ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்பாருங்கள்“ .

பல்லவி

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். 5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. பல்லவி

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். 7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி


இரண்டாம் வாசகம்



திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:30-5:2

கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார். மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்: கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

''இயேசு அவர்களிடம், 'வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்றார்'' (யோவான் 6:35)


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:41-51

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே " என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். "இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, 'நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படி சொல்லலாம்? " என்று பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: "உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.' "கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வுதரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திpலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். "


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணிலிருந்து இறங்கி வந்தேன்” என்று கூறிய நற்கருணை நாதரே.

புரட்சிகர புதிய கண்டு பிடிப்புக்கள், கவர்ச்சியை காசாக்கும் காரியங்கள், மானிடத்தை மாயைக்குள் அழைத்து செல்ல, மனித மாண்பற்ற தன்மைகளால், பண்பற்ற கலாசார நிலைகளால் ஆன்மீகத்தை அழிவு நிலைக்குள்ளாக்கும் எமக்கு அருள் வழிகாட்டி நிறைவாழ்வை நோக்கி எம்மை அழைத்துச் செல்லும் பாப்பானவர் ஆயார்கள் அருள்பணியாளர்கள் மற்றும் அனைவரையும் ஆசிர்வதித்து அவர்கள் நாளும் பயனிக்கும் சறுக்கான பாதைவழியே வழுக்காமல் உம்மை நோக்கி சென்று என்றும் உம் திருவுளத்தை நிறைவேற்ற நீரே அவர்களுக்கு துணையாக இருந்தருள வேண்டு என்று உம்மை மன்றாடுகிறோம்.

“வீரத்தின் விளைநிலமே இயேசுவே,

உம்மிடம் விளங்கிய நேர்மை, துணிவு, உண்மைக்காக உம்மைப் போற்றுகிறேன். இவை என்னிடம் போதுமான அளவு இல்லாததால் பல வேளைகளில் முணுமுணுத்து, என் இயலாமையை, கோழைத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். மன்னியும். ஆண்டவரே, எங்களை உம் தூய ஆவியால் நிரப்பும். வீரமும், நேர்மையும் தாரும். உண்மையை உரக்கப் பேசவும். நல்லதை துணிவுடன் ஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வரமருள வேன்டும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“அன்பின் இறைவா,

உம் திருமகன் இயேசுவை நாங்கள் எந்நாளும் நாடிச் சென்று அவர்தரும் உணவால் திடம் பெற்று வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” என்று திருவாய் மொழிந்த இயேசுவே

இன்றைய நிகழ்காலப் பேரழிவுகளால் பெரும் துயருற்று எதிர் கால ஏக்கங்களை உள்ளங்களில் சுமந்துகொண்டு வீங்கிய இதயத்துடன் விரக்தியின் விழிம்பில் இருந்து கொண்டு கற்பனைகளையும் கனவுகளையும் காற்றிலே பறக்க விட்டு வாடி நிற்கும் எம் இளைஞர்களை ஒருகணம் கண்நோக்கிபாரும். ஆண்டவரே நாம் உம்மையே நாடி வருகின்றோம். எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் விரக்திகளை மகிழ்வாக்கியருளும் எம் கனவுகளை கனிகளாக்கியருளும் கடவுளே என்றும் உம்பணியில் எம் கால்கள் நடந்து வாழ்வை கண்டடைய வரமருள வேன்டும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

”இறைவன் தந்த உணவான இயேசு ஆண்டவரே,

உம்மைப் போற்றுகிறோம். வாழ்வு தரும் உணவான உமது வார்த்தைகளையும், நிறைவு தரும் விருந்தான நற்கருணையையும், தந்தை இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் ஆர்வமாகிய உணவையும் எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.



“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.

உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம். அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி, ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும் விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம் எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை மகிழ்வாக்கியருளும். இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.



-->