பொதுக்காலம் 20 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 19-08-2012


''வாழ்வு தரும் உணவு''

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே./>


திருப்பலி முன்னுரை


கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே! இறைபிரசன்னத்தையும் இறை ஆசீரையும் நாடி வந்திருக்கும் உங்கள் அனவைரையும் இயேசுவின் நாமத்தில் வரவேற்கின்றேன். கடந்த சில வாரங்களாக நற்கருணையில் இறைவன் நம்மை ஒன்றுகூட்டி சேர்க்கிறார். நம்மை ஒன்றுசேர்த்த இறைவன் நமக்கு திடம்தந்து முன்னேறி செல்லவைக்கிறார் என சிந்தித்து அறிந்தோம்.

பிரியமானவர்களே! இன்று பொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு. வலிமை தரும் உணவும், வாழ்வு தரும் உணவும் நற்கருணை என்பதனை உணர்த்தும் வார்த்தைகளை இறைவார்த்தை நமக்கு தருகின்றது. திவ்ய நற்கருணை வெறும் உணவும், திராட்சை ரசமும் அல்ல, உண்மையாகவே கிறிஸ்து தான் என்று சொல்கிறது. இந்த உணவும், இரசமும் நமக்கு எப்படி பாம்பும், தேளும், நீரும் இல்லாத பாலைவனத்தில் நமக்கு உதவப்போகிறது. இயேசு உண்மையாகவே நமது தாகத்தை தீர்க்கிறார் மேலும், நமது பசியை நீக்குகிறார். நாம் அவரை முழுமையாகவே ஏற்றுகொள்வதை போல, அவரும் நம்மை முழுதுமாக எற்றுகொள்கிறார். நாம் அவரை உள்ளிழுப்பது போல, அவரும் நம்மை அவருள் இழுத்து கொள்கிறார். இந்த இணைப்பில், நமது சோதனைகளில் வெற்றியடைகிறோம்.இதனை உணர்ந்தவர்களாகவும், உணர்த்துபவர்களாகவும் பலியிலே பங்கெடுத்து செபிப்போம்.

முதல் வாசகம்


நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6

ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, `அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்' என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது; `வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்; பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்'' என்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 34: 1-2. 9-10. 11-12. 13-14 (பல்லவி: 8)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். .

பல்லவி

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. பல்லவி

11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். 12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? பல்லவி

13 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! 14 தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. பல்லவி


இரண்டாம் வாசகம்



திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 15-20

சகோதரர் சகோதரிகளே, உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள். திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 6: 56 - அல்லேலூயா, அல்லேலூயா! எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?'' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந் திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


கடவுளை இழந்த வாழ்வு களைப்படையும். களை இழக்கும். கடவுளைக் கொண்ட வாழ்வு உயிர் பெறும். உயிரோட்டமாய் வாழும். ஏனென்றால் நிலையானவர் அவர், நிரந்தரமானவர் அவர், நிறைவானவர் அவர். நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“இனிமையான தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவி கள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும்; இறைவாக்கினர் எலியாவைப்போல் இறைவார்த்தை, நற்கருணை ஆகியவற்றால் வலிமையடைந்து, அனைத்து மக்களுக்கும், ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்து, மக்களை வழிநடாத்துவதற்கு வேண்டிய அருளை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“வீரத்தின் விளைநிலமே இறைவா,

அழியாமைக்கென்றே படைக்கப்பட்ட மனிதர்கள் நாங்கள், அழியாத ஆன்மாவை அழியாமல் காக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“அன்பின் இறைவா,

உம் திருமகன் இயேசுவை நாங்கள் எந்நாளும் நாடிச் சென்று அவர்தரும் உணவால் திடம் பெற்று வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” என்று திருவாய் மொழிந்த இயேசுவே

உம்மைப் போற்றுகிறோம். வாழ்வு தரும் உணவான உமது வார்த்தைகளையும், நிறைவு தரும் விருந்தான நற்கருணையையும், தந்தை இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் ஆர்வமாகிய உணவையும் எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

”உணவின் வழி உறவினை உறுதி செய்தவரே,

நாங்கள் திருவிரந்தின் வழி உம்மோடு கொண்டுள்ள உறவினை உறுதி செய்து உண்மையாய் வாழ்ந்திட வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.



“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.

உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம். அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி, ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும் விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம் எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை மகிழ்வாக்கியருளும். இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.



-->