பொதுக்காலம் 29 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 21-10-2012


'உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக

இறையரசில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். 
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்./>  இறையரசில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். 
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.


திருப்பலி முன்னுரை


அழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இறையரசில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். என்று யேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். இறையரசின் நன்மைக்காக, நாம் மற்றவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்.

கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் பங்குபெறுவதன் அவசியத்தை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதராய் பிறந்த அனைவரும் துன்பத்தை ஏற்பதன் வழியாக, இன்பத்தின் மேன்மையை உணர அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்து தனது சிலுவை மரணத்தின் வழியாக உயிர்ப்பின் மாட்சியை அடைந்தார். இறைத்தந்தையின் இரக்கத்தைப் பெற்று கிறிஸ்துவின் வலப்பக்கத்தில் அமருமாறு, தூய வாழ்வு வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்த இறைமகன் இயேசுவைப் பின்பற்றி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்


இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 53: 10-11

அந்நாள்களில் ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளர் ஆக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: 22)

பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!

பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! பல்லவி



இரண்டாம் வாசகம்



எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16

சகோதரர் சகோதரிகளே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கை இடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மாற் 10: 45 - அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45

அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், ``போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்'' என்றார்கள். அவர் அவர்களிடம், ``நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, ``நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்'' என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், ``நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ``இயலும்'' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ``நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்'' என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ``பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


மானிட மகன் பணியேற்க அல்ல, பணிபுரியவே வந்தார். பணிவிடை பெறுவதற்கு அனைவருக்கும் ஆசைத் தான். சுகமாக வாழ்வதற்கு அவை உதவலாம் ஆனால், இயேசுவின் உயிர்ப்பிலே பங்கேற்க பணிவிடை புரிவது அவசியம். பணிவிடை புரியும் மனிதர்கள் பாடுகளை ஏற்கலாம், மரணத்தை தழுவலாம், அதுவே நிறைவாழ்வுக்கு வழி.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அனைவரும் என்னைப் போல இருங்கள் என்று சொன்ன எம் இறைவா!

உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள, குருக்கள, கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அருள்மழை பொழிபவராம் இறைவா,

எம் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் மேன்மையை உணர்ந்து கொள்ளவும், தனது சிலுவை மரணத்தின் வழியாக அவர் பெற்றுத் தந்த மீட்பின் பலன்களை உரிமையாக்கி கொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் உம்மிடம் கற்றுக்கொண்டவை, உம் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, உம்மிடம் கேட்டறிந்தவை, உம் வாழ்வில் நாங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடித்து, நற்கனி கொடுக்கும் மக்களாக வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே,

நவீனம் என்னும் பெயரில் கலாச்சாரத்தையும, பண்பாட்டையும் துளைத்து நிற்கும் இச்சமுதாயத்திற்காக மன்றாடுகிறோம். நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்தரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆறுதல் தருபவராம் இறைவா,

உலகில் வறுமை, நோய், தனிமை, முதுமை, இல்லாமை, இயலாமை போன்ற பல துன்பங்களால் வேதனையுறும் மக்கள் அனைவரும், உமது ஆறுதலைப் பெற்று மகிழச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

”தூய்மையின் நிறைவாம் இறைவா,

நிலைவாழ்வை நோக்கி நாங்கள் பயணம் சென்றிட எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.






சிந்தனை


இறையரசில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.

நற்செய்தியை அறிவியுங்கள்

நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெற வேண்டி, நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன். பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள். பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றிவாகை சூடுவதற்காக இப்படி செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப் போல் ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப் போலக் குத்துச்சண்டை இட மாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே, தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன். (1கொரி 9:23-27)

நற்செய்தி

1)திருச்சட்டம் அறியாதார் மூலம் நீங்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால், மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை (திப 2:23-24). நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அன்று, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம்மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது (யோவா 4:10, பிலி 2:6-11, உரோ 10:9). நற்செய்தி அறிவிப்பது ஒவ்வொருவரின் உரிமை தம் உடலுக்கு ஒருவர் உணவைத் தேடவோ, தண்ணீரைக் குடிக்கவோ, பிறரைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும் என்பதல்ல. சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதும் ஒவ்வொருவருக்கும் உரிமையானவை தந்தையினுடைய சொத்தை மகன் பக்கத்து வீட்டுக்காரனிடம் கேட்டுத்தான் ஆளவேண்டும் என்பது தேவையற்றது. தந்தையினுடைய சொத்து எப்போதும் மகனுக்குத்தான், இயேசுவினுடைய பணியானது திருத்தூதுவர்களுக்கு உரிமையாகக் கொடுக்கப்பட்டது. அத்திருத்தூதுவர்கள் வழியாகப் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு கிறிஸ்துவனுக்கும் இது உரிமையாகிறது.

நற்செய்தி அறிவிப்பது ஒவ்வொருவரின் கடமை

ஓவ்வொரு கிறிஸ்துவ வாழ்வும் நற்செய்திக்கான போராட்டம். நற்செய்தி அறிவிக்காவிடில் அய்யோ எனக்கு கேடு. நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. ஆனால் நானாக விரும்பாவிட்டாலும், இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. ஓவ்வொரு கிறிஸ்துவனுக்கும் புனிதப் பவுலைப் போலக் கடமை இருக்கிறது. தான் பெற்ற கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்பதே அக்கடமையாகும்.

பந்தயத்தில் பரிசு வாங்கியவர்கள்

புனித தோமா இந்த உரிமயையும் கடமையையும் இரண்டு கண்ணாகக் கொண்டு செயல்பட்டதால்தான் இந்தியாவின் அப்போஸ்தலர் என்ற பரிசு பெற்றார். புனித சவேரியார் நற்செய்திக்காக மட்டுமே தம் உடலைக் கையளித்ததால் ஐந்நூறு வருடங்களுக்குப் பிறகும் இன்னும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். புனித அருளானந்தர் நற்செய்தி அளிப்பது மட்டுமே எனது பணி என்றிருந்ததால் இன்றைக்கும் அவருடைய இரத்தம் சிந்தப்பட்ட மண் இன்னும் குறைவுபடாமலேயே சிவப்பாக இருக்கிறது. அன்னை தெரஸா நற்செயல்களில் நற்செய்தி அறிவிப்பதை தம் வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்ததால் இன்றைக்கும் அவர் அன்பின் தெரஸாவாகவே திகழ்கிறார்.

விளைவு

அசோக மரம், தென்னை மரம் இரண்டுமே உயரம்தான், ஆனால் வித்தியாசம் இருக்கிறது. நாம் உயர்ந்திருப்பதை விட மற்றவருக்கு உபயோகமாக உயர்ந்திருப்பதில்தான் உயர்வு இருக்கிறது. செயல்படுவதென்றால் உறுதியோடு செயல்படுவோம். விட்டுக் கொடுப்பதென்றால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுப்போம். நற்செய்தியே நமது அடிப்படை. நற்செய்தி மூலமே திருச்சபைக்கு வளர்ச்சி, நற்செய்தியே நமது வாழ்வு.

கேள்வி

நற்செய்திப் பணியில் எனது பங்கு என்ன? (காண்: உரோ 15:14-21:10-15)

மன்றாடுவோம்:

வாய்சொல் வீரர் நிறைய உண்டு. வாய்ப் பந்தல் போடுவோருக்கு இன்று குறையே இல்லை. கடினமான பாதையை கைகாட்டிவிட்டு நடையைக் கட்டுகிறவர்கள் உண்டு. எருசலேம் நோக்கிய பயணம் பாடுகள், துன்பங்கள் நிறைந்தது. அவமானம், சிலுவை மரணத்தில் முடிவது. பிறர் வாழ்வுக்காக தன்னை இழப்பது. இந்த வாழ்கையை கையை காட்டிவிட்டு மாற்றுப் பாதையில் இயேசு செல்லவில்லை.

" இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்" (மாற் 10:32)

கரடு முரடான காட்டுவழியில் அவர் நமக்கு முன் நடந்து தடம் அமைத்து தந்துள்ளார். பூகம்பம் நிறைந்த வாழ்வில் புதிய புரட்சிப் பாதை அமைப்பதில் இயேசு நமக்கு முன் நடந்து புதிய பாதை அமைத்துள்ளார். நம் வாழ்வின் துன்பப் பயணத்தில் நமக்கு முன் நடந்துகொண்டிருக்கிறார்.உன் வாழ்வின் இருள் சூழ்ந்த நேரங்களில், பகுதிகளில் உனக்கு முன் உன் தெய்வம் இயேசு அங்கு வந்து உன் வாழ்வின் இருளை அகற்றி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். இதுவே உன் தெய்வம் இயேசு. உங்கள் வாழ்வின் துன்பமும் கவலையும் இருளும் சூழ்ந்த இடங்களில் எல்லாம் இயேசு உங்களுக்கு முன் சென்று அனைத்தையும் நிவர்த்தி செய்து, மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த உயிர்ப்பின் அனுபவமாக மாற்றித்தருவதை உங்களால் நம்ப முடிகிறதா! இதுவே உண்மை. சீடர்கள் திகைப்புற்றனர். ஏனையோர் அச்சம் கொண்டனர். நீங்கள் நம்புங்கள். நல்லவை நடக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள்.
-->