பொதுக்காலம் 33 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 18-11-2012


''இரண்டாம் வருகை''

ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; 
விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது/> ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; 
விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; 
விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது


திருப்பலி முன்னுரை


அழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் முப்பத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

திருடன் எப்போது வருவான் என்று யாருக்குத் தெரியும். அதுபோல விபத்து எப்போது நிகழும் என்று யாருக்குத் தெரியும். சாவு எப்போது வரும் என்றும் எவருக்கும் தெரியாது. கடவுள் எப்போது வருவார் என்று யூகிக்க இன்றைய இந்த ஞாயிறு திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மைத் தயார் செய்ய நம் ஆண்டவர் அரசருக்குரிய மாட்சியுடன் நமக்கு தீர்ப்பிட வரும் நாளில் நிகழப்போகின்றவை பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்காக நாம் எப்பொழும் தயாராக இருக்க வேண்டுமென இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. கிறிஸ்து இயேசுவின் பலியால் தூயவர்களாக மாற்றப்பட்டிருக்கும் நாம், தொடர்ந்து அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம்வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்


இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3

``அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

பல்லவி

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி



இரண்டாம் வாசகம்


எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-14,18

சகோதரர் சகோதரிகளே, ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். எனவே பாவ மன்னிப்புக் கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 21: 36 - அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


நற்செய்திக்கு முன் வசனம்

நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயம் உண்டு. நீதித் தீர்ப்புக்கு அனைவரும் ஆளாவோம். நல்லன செய்தோர் நல்வாழ்வு பெறுவர். அல்லன செய்வோர் உரிய பலனை பெறுவர். அச்சம் தரும் நிகழ்வல்ல அது. மகிழ்ச்சி காணும் விழா அது. இறைவனுக்கு உகந்த வாழ்வை வாழ்ந்தோர் அதனை வரவேற்பர். தெய்வ பயமின்றி வாழ்ந்தோர் அந்நாளைக் கண்டு பயப்படுவர்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அனைவரும் என்னைப் போல இருங்கள் என்று சொன்ன எம் இறைவா!

உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள, குருக்கள, கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வருகையின் நாயகனே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். முதல் முறை வந்து எங்களை மீட்டவரே, உமக்கு நன்றி. இரண்டாம் முறை உலகிற்குத் தீர்ப்பு அளிக்க இருப்பவரே, உமக்குப் புகழ். ஆண்டவரே, எல்லாக் காலத்திலும், எல்லா வேளையிலும் உமது திருவுளத்தை நிறைவேற்றி, எங்கள் மரணத்துக்கு, உமது இரண்டாம் வருகைக்கு எப்போதும் தயாராக இருக்கும் அருளைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அமைதியான நீர்நிலைகளுக்கு எங்களை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா!

இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்காகவும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும் சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மகிழ்ச்சி தருபவராம் இறைவா,

பாவம் என்னும் நோயால் உலகில் நிலவும் அன்பின்மை, ஆதரவின்மை, நம்பிக்கையின்மை, உதவியின்மை போன்றவை அகன்று, மக்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைக் காணச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா,

நிறைவு நோக்கி எங்களை நீர் வழிநடத்துகிறீர் என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மேன்மை நிறைந்தவராம் இறைவா,

எம் நாட்டு மக்கள் அனைவரும் உம் திருமகனைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளவும், அனைத்துக்கும் மேலாக உமது நீதியின் அரசை விரும்பித் தேடவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.






சிந்தனை


எப்போது வரும் அந்த நாள்

சில நாள்கள் திருடன் எப்போது வருவான் என்று யாருக்குத் தெரியும். அதுபோல விபத்து எப்போது நிகழும் என்று யாருக்குத் தெரியும். சாவு எப்போது வரும் என்றும் எவருக்கும் தெரியாது. இந்த ஞாயிறு- கடவுள் எப்போது வருவார் என்று யூகிக்க அழைப்புக் கொடுக்கிறது.

தீர்ப்பு நாள்

வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா இனத்தவரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். அங்கே அவர் நடுத்தீர்ப்பார். (மத் 25) அந்த நாளில் இயற்கையில் பெரிய பெரிய மாற்றங்கள் எழலாம் என்பது எசாயா இறைவாக்கினர் காட்சியில் கூறப்பட்டுள்ளது. (எசா,13) அந்த நாளில் வான மண்டலங்கள் அதிர்ந்து வேறு உருப்பெறலாம் (எசா, 32:7) அந்த நாளில் பூமி அசைக்கப்படலாம் (தி,பெ,6:12-16)

ஆண்டவரின் நாள்

சிங்கத்திடமிருந்து தப்பியவன் - எதிரிலே கரடி ஒன்றைச் சந்தித்து மீண்டும் தப்பியோடி ஒரு வீட்டிற்குள் நுழைந்து சுவரில் கைவைத்தவனை ஒரு பாம்பு கடித்தால் எப்படி இருக்கும்? அப்படியே இன்னதுதான் நடக்கும் - இதுதான் நிறைவேறும், இன்றைக்குத்தான் வரும் என்று அந்த நாளை எண்ண முடியாது, மனிதன் எதிர்பார்க்காத நேரத்தில் ஆண்டவரின் நாள் வரலாம். (ஆமோ, 8:18-19)

சினத்தின் நாள்

மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகியது, மண்லுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார், (தொநூ 6:8.6) இதன் விளைவு நோவா காலத்து அழிவாகும், நோவாவைத் தவிர மற்றெல்லாரும் ஆண்டவரின் கோபத்திற்கு ஆளானார்கள். அது போல அந்த நாள் சினத்தின் நாளாகவும் வரலாம், பேரழிவு உண்டாகலாம். (செப், 1:12-16) வான மண்டலங்களிலிருந்து வான தூதர்கள் வருவார்கள், நல்லவர்களிலிருந்து கெட்டவர்களையும், கெட்டவர்களிலிருந்து நல்லவர்களையும் பிரித்தெடுப்பார்கள்.(மத் 25)

உயிர்ப்பு நாள்

உலகம் எப்போது முடியும்? உலகமெல்லாம் நெருப்பினாலே வேக மனிதர் எல்லாரும் செத்துப் போவார்கள். பின்னர் தீர்வை நடக்கும் காலம் வருகிறது, அப்போது இறந்தோர் இறைமகனின் குரலைக் கேட்பர், பொல்லாது செய்தவர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர், நல்லது செய்தவர் வாழ்வு பெற உயிர்தெழுவர். (யோவா 5:25-29)

விளைவு

அந்த நாள் எப்படியும் வரும், எப்போதும் வரலாம், அந்த நாள் நிச்சயம். கடவுள் மனிதனை சந்திக்கும் நாளாய் இருக்கும், பல குறிக்கப்பட்ட நாள்கள் - திருமண நாள். புதுநன்மை - உறுதிப்பூசுதல் நாள். குருப்பட்ட நாள்‚ இன்னும் பல விழா நாள்களுக்கு எவ்வாறு விழிப்பாயிருக்கிறோம், ஆயத்தம் செய்கிறோம், குறிக்கப்பட்ட நாளுக்கே அப்படி என்றால், குறிப்பிடப்படாத நாளுக்கு இன்னும் அதிகப்படியான ஆயத்தம் தேவையல்லவா? தூண்டிலோடு மீனுக்காக விடிய விடியக் காத்திருக்கும் மீனவனின் காத்திருப்பும் அவசியம், ஒற்றைக்காலில் சஞ்சலம் பாராமல் நின்று கொண்டிருக்கும் கொக்கின் விழிப்பும் அவசியம்.......

அந்த நாள் எப்போதும் - எப்படியும் வரலாம்.

கேள்வி

அந்த நாளுக்காக என்னுடைய ஆயத்தம் என்ன?

மன்றாடுவோம்:

இறைவா, எங்கள் வாழ்க்கை அன்பின் வெளிப்பாடாக அமைந்திட அருள்தாரும்.
-->