ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









சர்வதேச இளையோர் தின மாநாடு பற்றி ஒரு கண்ணோட்டம்



இறையேசுவுக்குள் பிரியமானவர்களே! மீண்டுமாக ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க இணையத்தளம் ஊடாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த மாதம் (ஆடி மாதம்) 26 ம் திகதியிலிருந்து 31 ம் திகதி வரை உலகளாவிய இளையோர் தின மாநாடு நடக்கவிருப்பது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தரும் பல்லாயிரக்கணக்கான இளையோர்கள், போலந்து நாட்டில் உள்ள கிறாக்கோவ் நகரில் ஒரு கூட உள்ளார்கள். இந்த அழகிய தருணத்திலே, உலக இளையோர் தினம் பற்றிய பல்வேறு தகவல்களுடன் எனது இந்த சிறிய எழுத்தாக்கத்தினை ஆரம்பிக்கலாம் என கருதுகின்றேன்.

சர்வதேச இளையோர் தினம் எவ்வாறு உருவானது என்று பார்த்தால், 1984 ம் ஆண்டு மீட்பின் புனித ஆண்டாக திருத்தந்தை புனித 2 ம் அருளப்பர் சின்னப்பரால் பிரகடனப்படுத்தப்பட்ட போது, பரிசுத்த திருத்தந்தை புனித 2 ம் அருளப்பர் சின்னப்பர் இந்நிகழ்வை சிறப்பிக்க குருத்து ஞாயிறு அன்று புனித பேதுரு சதுக்கத்தில் அணிதிரளுமாறு உலகளாவிய ரீதியில் இளையோருக்கு அன்பான அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். திருத்தந்தையின் அழைப்பை ஏற்று 300,000 க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் அணிதிரண்டு வந்திருந்ததை பார்த்து மகிழ்ந்த திருத்தந்தை, உலக இளையோர் தின சிலுவை என ஒரு சிலுவையை கிறிஸ்தவ அன்பிற்கும், மனித மாண்பிற்கும் அடையாளமாகக் கொடுத்து, உலக இளையோர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற போது இந்த சிலுவையானது எடுத்து செல்லப்படுகின்ற அன்பின் அடையாளமாக இது திகழ வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். இதுவே உலக இளையோர் தினம் ( World Youth Day ) உருவாகுவதற்கான அடித்தளமாக அமைந்தது.

1985 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச இளையோர் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்ட போது, இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாக கருதிய திருத்தந்தை, இளையோர்களை புனித பேதுரு சதுக்கத்தில் ஒன்றுகூடுமாறு மீண்டும் இளையோருக்கு அன்பான அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். இதற்கு இளையோர்களிடமிருந்து மிகுந்த ஆதரவு கிடைத்திருந்தது. இதன் படி மார்கழி 20 ம் திகதி 1985 ம் ஆண்டு, முதலாவது சர்வதேச இளைஞர் மாநாடு 1986 இல் இத்தாலியில் நடைபெறும் என்று திருத்தந்தை புனித 2 ம் அருளப்பர் சின்னப்பர் அவர்கள் பகிரங்க அறிவிப்பு ஒன்றை விடுத்து சர்வதேச இளைஞர் மாநாடு என்ற ஒன்றை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். உலகத்தின் பல்வேறுபட்ட இன, மொழி , கலாசாரத்தினூடாக கிறிஸ்து இயேசுவை இளைஞர்கள் அனைவரும் சந்திக்கின்ற ஒரு புனித நிகழ்வாக இதனை திருத்தந்தை கருதினார். நற்செய்தியானது, இளைஞர்களிடையே எடுத்து செல்லப்படுவதற்கும், பல இளைஞர்களை இயேசுவின் சீடர்களாக உருவாக்குவதற்கும் ஒரு உந்து சக்தியாக இம்மாநாடு அமைந்தது. முதலாவது சர்வதேச இளைஞர் மாநாட்டிலே 800,000 இளையோர்கள் கலந்து கொண்டனர். அன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெறுகின்ற ஒரு உலக நிகழ்வாக இது நடைபெற்று வருகின்றது. இதுவரை 13 முறை சர்வதேச இளைஞர் தின மாநாடுகள் நடைபெற்று இருக்கின்றன. இந்த ஆண்டு 2016 ம் ஆண்டு போலந்து நாட்டில் உள்ள கிறாக்கோவ் நகரில் ஆடி மாதம் 25 - 31 ம் திகதி வரை இம்மாநாடு நடைபெற இருக்கின்றது.

எதற்காக இந்த சர்வதேச நிகழ்வு இளைஞர்களுக்கு மட்டும் நடைபெறுகிறது? ஏன் பரிசுத்த தந்தை இளையோருக்கு இவ்வளவு முக்கியப்படுவம் கொடுத்து இருக்கிறார் என நீங்கள் கேட்கலாம். இதற்கு காரணம், உலகின் சனத்தொகையில் கூடுதலாக இளைஞர்களே காணப்படுகிறார்கள். இளைஞர் சக்தி என்பது இரும்பையும் கரும்பாகும் சக்தி என்று பலர் கூற கேள்வி பட்டு இருப்பீர்கள். ஒரு நாட்டின் அபிவிருத்தியில், கல்வியில், பொருளாதாரத்தில், ஏன் அரசியலிலும் செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு சக்தியாக இளையோர்கள் காணப்படுகின்றார்கள். உலக வரலாற்றில் நடைபெற்ற பல்வேறு புரட்சிகளில், போராட்டங்களில் முக்கிய பங்கினை வகித்தவர்கள் இளையோர்களே என்றால் அது மிகையாகாது. அதுமட்டுமா, பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர்களில், போராளிகளாக பயன்படுத்தப்படுவர்களும் இவர்களே. ஆகவே இளையோர்களின் மாபெரும் சக்தியை உலகத்தின் ஆக்கத்திற்கு மட்டுமல்ல அழிவிற்கும் பயன்படுத்த முடியும். இன்று பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் வாதிகள், வியாபாரிகள். என பலர் எமது இளையோர்களை பல்வேறு தீய வழிகளுக்கு பயன்படுத்துவதை நாம் யாவரும் அறிவோம். ஆகவே இவற்றை எல்லாம் அறிந்த பரிசுத்த தந்தை, எமது இளையோரை நல்வழிப்படுத்தி அவர்களின் மாபெரும் சக்தியை உலகின் அபிவிருத்திக்காகவும், மனிதத்துவத்தினை இந்த உலகிற்கு எடுத்து செல்லும் இறைவனின் கருவிகளாகவும், அன்பின் நற்செய்தியை பரப்பும் பணியாளர்களாகவும் இவர்களை பயன்படுத்த எண்ணினார். இதன் ஒரு முயற்சியாகவே இந்த இளையோர் தினம் உருவாக்கப்பட்டது என கூறலாம். அதுமட்டுமா, இறை மகன் இயேசு கூட இளையோர்களையே அதிகம் அன்பு செய்தார் என்று கூறினால் அது தவறாகாது. யேசுவின் பெரும்பாலான சீடர்கள் இளைஞர்களே. அடுத்து நற்செய்தியை படிக்கின்றபோது இறைமகன் இயேசு குணமாக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் இளையோர்களே. ஆகவே இறைமகன் இயேசுவும் இளையோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார். அது மட்டுமா, இன்று திருச்சபையின் பல்வேறுபட்ட பணிகளில் பெரும்பாலான இளையோர்கள் பணி செய்வதை காணலாம்.

அடுத்து இந்த மாநாட்டின் மகுட வாசகமாக இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். (மத்தேயு .5:7) என்ற இறைவார்த்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சபையினால் இறை இரக்கத்தின் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஆண்டிலே, போரினாலும், வறுமையினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும், மனிதாபிமானம் இல்லாத வெறித்தனமான பயங்கரவாத தாக்குதல்களினாலும் பாதிக்கப்பட்டு வாழ வழியிழந்து நிற்கும் எமது உலக வாழ்மக்களுக்கு உதவுகின்ற கிறிஸ்துவின் சீடர்களாக, எமது இளைய சமுதாயம் உருவாகவும், கிறிஸ்துவின் இரக்கத்தின் நற்செய்தியை உலகமெங்கும் பறைசாற்றும் கிறிஸ்துவின் சாட்சிகளாக இளைஞர்கள் உருவாகவும் இந்த சர்வதேச இளையோர் மாநாடு நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது. எனவே இம்மாநாட்டில் பங்கெடுக்கின்ற இளையோர்கள், நலன் விரும்பிகள், இதனை ஒரு சுற்றுலாப்பயணமாக கருதாது இதனை ஒரு ஆன்மீக யாத்திரையாக ஏற்று இறை இயேசுவின் இரக்கத்தின் கருவிகளாக மாறி இவ்வுலகில் இறையரசை கட்டியெழுப்புவோம்.
[2016-07-18 23:06:33]


எழுத்துருவாக்கம்:

சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB
புனித. தோமஸ் இறையியல் கல்லூரி
மெஸினா, சிசிலியா
இத்தாலி